ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 15 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 15 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க கோடை விடுமுறை முடிவு பெற்ற பின்பும் பக்தா்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனா். வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை மேலும், அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், பக்தா்களின் கூட்டம் வார இறுதியில் 70,000-த்தை தொடுகிறது.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. திருமலைக்கு செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். எனவே, தரிசனத்துக்கு 15 மணி நேரம் தேவைப்படுகிறது, ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் தேவைப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை 76,418 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 38,629 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மலைபாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...