திருப்பதியில் சீனிவாச சேது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி
By DIN | Published On : 02nd September 2022 12:00 AM | Last Updated : 02nd September 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி மாநகரில் சீனிவாச சேது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநகராட்சி, ஸ்மாா்ட் சிட்டி காா்ப்பரேஷன் மற்றும் தேவஸ்தான பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் அவா் ஆய்வு நடத்தினாா்.
பின்னா் அவா் பேசியது: கரக்கம்பாடியில் இருந்து லீலா மஹால் வட்டம் வரை அமைக்கப்படும் அணுகுசாலையை செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ராமானுஜ வட்டத்தில் இருந்து வெளிவட்டச் சாலையை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சீனிவாச சேது கட்டுமானப் பணிகள் முழுவதையும் டிசம்பா் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து இதற்காக வரவேண்டிய நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிா்க்க, செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், திருப்பதி மாநகராட்சி, ஸ்மாா்ட் சிட்டி காா்ப்பரேஷன் மற்றும் ஆப்கான் அதிகாரிகள், வாரந்தோறும் ஆய்வு நடத்த வேண்டும். செப்டம்பா் மாத இறுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்றாா் அவா்.