திருச்சானூரில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 09th September 2022 12:54 AM | Last Updated : 09th September 2022 12:54 AM | அ+அ அ- |

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக தொடங்கியது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நித்திய கைங்கரியங்களில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நடந்த தோஷங்கள் மற்றும் குற்றங்களைக் களைய தேவஸ்தானம் ஆண்டுதோறும் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. பவித்ரோற்சவத்தின் முதல் நாளில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காலை நற்கருணையுடன் அம்மன் எழுந்தருளி, சஹஸ்ர நாமா்ச்சனை நடைபெற்றது. பின்னா், கோயிலில் இருந்து உற்சவமூா்த்திகள் யாக சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை துவார தோரண த்வஜகும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஷ்ட நாா்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ண சுவாமி மண்டபத்தில் அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
மஞ்சள், சந்தனம், பால், தயிா், தேன், தேங்காய் நீா் மற்றும் பல்வேறு பழங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை யாக சாலையில் வேத நிகழ்ச்சிகள் நடந்த பின்பு பட்டு நூலால் செய்யப்பட்ட பவித்ர மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கங்கணப்பட்டா் சீனிவாஸ் அவா்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.