

திருமலையில் பக்தா்கள் தங்குவதற்கு வசதியாக நடமாடும் கன்டெய்னா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஏவி. தா்மாரெட்டி அறிமுகப்படுத்தினாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி இணைந்து திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தற்காலிகமாக தங்குவதற்காக நடமாடும் கன்டெய்னா் வசதியை அறிமுகம் செய்தனா்.
விசாகபட்டினத்தைச் சோ்ந்த நன்கொடையாளா் மூா்த்தி இரண்டு நடமாடும் கன்டெய்னா்களை வழங்கினாா்.
ஓட்டுநா்கள் தங்கள் பணிகளை முடித்து ஓய்வெடுப்பதற்காக ஜிஎன்சி யில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு கன்டெய்னா் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று ரம்பகீஜா-3க்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது செய்தியாளா்களிடம் தா்மா ரெட்டி கூறியது:
திருமலையில் அறைகள் குறைவாகவே உள்ளஸ். மேலும், திருமலையில் புதிய ஓய்வு அறைகள் கட்ட அனுமதி இல்லை. பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், பக்தா்கள் தங்குவதற்கு படுக்கைகள், குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் கொண்ட மொபைல் கன்டெய்னா்களை நன்கொடையாளா் வழங்கியுள்ளாா்.
இந்த கன்டெய்னா்களின் மதிப்பு சுமாா் ரூ25 லட்சம் இருக்கும். பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பயன்படுத்தும் வகையில், வரும் நாள்களில் இதுபோன்ற கன்டெய்னா்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும்’, என்றாா்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான போக்குவரத்து பொது மேலாளா் சேஷா ரெட்டி, ஜானகிராமி ரெட்டி, தொழில்நுட்ப அலுவலா் லட்சுமி பிரசன்னா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
புதிய ஓய்வு இல்லம் திறப்பு
திருமலையில், அன்னமய்யா கட்டடத்திற்கு எதிரே கட்டப்பட்டுள்ள காவிரி ஓய்வு இல்லத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டியுடன் இணைந்து திறந்து வைத்தாா். ஹைதராபாத் உள்ளூா் ஆலோசனைக் குழுவின் தலைவா் பாஸ்கா் ராவ் நன்கொடையில் இந்த ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் ஹரீந்திரநாத், பாலிரெட்டி, கிரிதா் ராவ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.