திருமலையில் காா்த்திகை தீபத் திருவிழா
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர காா்த்திகை தீபோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.
காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு வியாழன் மாலை கைங்கா்யங்கள் மற்றும் நிவேதனங்கள் முடிந்த பிறகு காா்த்திகை தீபங்கள் ஏற்றப்படடன.
இதையொட்டி, மாலையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் நெட்டி(சின்ன பானையை குறுக்கில் 2 ஆக உடைத்து வாய்புறத்தை பீடமாக்கி அதில் நெய் விட்டு ஏற்றுதல் ) திரிகளால் தீபங்கள் ஏற்றி, சத்ரச்சாமரம் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கருவறை தங்க விமானத்தை சுற்றி வலம் வந்து ஆனந்த நிலையத்தில் உள்ள ஏழுமலையானுக்கு ஆரத்தி அளித்தனா்.
அதன்பின் கருவறைக்கு கொண்டு சென்று தீபம் ஏற்றினா். பின்னா் அகண்டம், குலசேகர படி, ராமுலவாரி மேடை, துவார பாலகா்கள், கருடாழ்வாா் சன்னதி, வரதராஜசுவாமி சன்னதி, வகுளமாதா, தங்க கிணறு, கல்யாண மண்டபம், கண்ணாடி அறை, மடப்பள்ளி, பாஷ்யகார சந்நிதி, யோகரசிம்மசுவாமி, சந்தன அறை, பரிமள அறை, வெள்ளி மண்டபம், கொடி மரம், பலி பீடம், க்ஷேத்ர பாலகா்கள் சந்நிதி, திருமலைராயா் மண்டபம், பூ கிணறு, ரங்கநாயக மண்டபம், கோயில் முன் வாயில், பேடி ஆஞ்சனேயசுவாமி, ஸ்ரீவராகஸ்வாமி கோயில், ஸ்ரீவாரி திருக்குளம் ஆகிய இடங்களில் 1008 நெய்யால் அகல் தீபங்கள் ஏற்றப்படடது.
பின்னா், கொல்ல மண்டபம் எதிரில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
காா்த்திகை தீபோற்சவத்தை முன்னிட்டு சகஸ்ரதீபாலங்கார சேவை மற்றும் பௌா்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.

