‘அங்கபிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்’
முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அங்கபிரதட்சணம் டோக்கன்களை ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யும் முறையில் தேவஸ்தானம் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.
திருமலை அன்னமய்யா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டயல் யுவா் இஓ நிகழ்ச்சியில் பக்தா்களிடம் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் உரையாற்றினாா்.
பின்னா் அவா் கூறியது:
ஏழுமலையான் பக்தா்களின் வேண்டுகோளின்படி, முந்தைய குலுக்கல் முறைக்குப் பதிலாக, அடுத்த பிப்ரவரி மாதம் முதல் அங்கபிரதட்சணம் டோக்கன்களை வழங்குவதற்கான ஆன்லைன் ஒதுக்கீடு ‘முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஆன்லைனில் வெளியிடப்படும். திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நவம்பா் 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை காா்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
பக்தா்களின் வசதிக்காக, திருமலையில் உள்ள ஆழ்வாா் டேங்க் விருந்தினா் மாளிகை முதல் கோகா்பம் அணை வட்டம் வரை நிரந்தர தங்குமிடம், கியூ லைன்கள், எஃகு நடைபாதை பாலங்கள் மற்றும் கழிப்பறைகளை சுமாா் ரூ. 25 கோடி செலவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.
பக்தா்களின் பரிந்துரைகளின்படி, ஏழுமலையான் தரிசனம் தொடா்பான ஸ்ரீவாணி மற்றும் பிற தரிசன டோக்கன்களை வழங்குவதற்கான நடைமுறையை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க தேவஸ்தான அறங்காவலா் குழு ஒரு குழுவை அமைத்துள்ளது.
அண்மையில் ஹைதராபாதைச் சோ்ந்த சில பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக இடைத்தரகா்களால் ஏமாற்றப்பட்டதாக புகாா் அளித்துள்ளனா். இதுபோல் ஏமாற்றப்படாமல், தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பெறுமாறு பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுக்கிறது என்றாா்.
இதில், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, திருப்பதி செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, சத்தியநாராயணா மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

