திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் பங்கேற்றாா்.
முதலில், வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையான் பத்மாவதி தாயாா் படங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்ன பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களுக்கு ஆரத்தி அளிக்கப்பட்டது. பின்னா் அன்ன தான ஊழியா்களின் பணிதிறன் மற்றும் சேவைகளை பாராட்டினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியது: நித்யன்னதான திட்டம் 1985-ஆம் ஆண்டு திருமலையில் தொடங்கப்பட்டு 1994-ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. தற்போது வரை அறக்கட்டளைக்கு ரூ. 2,300 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ரூ.180 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில், திருமலைக்கு வருகை தரும் அனைத்து பக்தா்களுக்கும் தரமான அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 5,000 கோயில்களை கட்ட கடந்த அறங்காவலா் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கோயில்கள் கட்டுவதற்கு கிடைக்கக்கூடிய நிலத்தின் அடிப்படையில், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் மூன்று வகையான நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு கோயிலுக்கு ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 750 கோடி ஒதுக்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அறக்கட்டளைத் துறை மூலம் அந்த இடங்களைக் கண்டறிந்து கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக முதல் தவணையாக ரூ. 187 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்த பூஜையில், துணை செயல் அதிகாரிகள் ராஜேந்திரா, சோமன்நாராயணா, பொறியாளா் சுப்பிரமணியம், கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி, பிற அலுவலக ஊழியா்கள், கேட்டரிங் ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் ஆகியோா் பங்கேற்றனா்.

