ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

4 கி.மீ. நடந்து பள்ளிக்குச் சென்ற பழங்குடி மாணவர்களுக்கு வேன் ஏற்பாடு

செய்யாறு அருகே, பள்ளிக்கு 4 கி.மீ. நடந்து சென்ற பூம்பூம் மாட்டு இனத்து மாணவர்களின் வசதிக்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2014, 8:07 pm

தே.சாலமன்

செய்யாறு அருகே, பள்ளிக்கு 4 கி.மீ. நடந்து சென்ற பூம்பூம் மாட்டு இனத்து மாணவர்களின் வசதிக்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்யாறு ஒன்றியம் தளரபாடி ஊராட்சியில் அமைந்துள்ளது சகாயபுரம் கிராமம். இக்கிராமத்தில் இந்து ஆதீயன் எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் நிலையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாத காரணத்தால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள புளூந்தை நடுநிலைப் பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். சின்னஞ்சிறு குழந்தைகளான இவர்கள் சகாயபுரம் கிராமத்தில் இருந்து, பள்ளி அமைந்துள்ள புளூந்தை கிராமத்துக்கு முள்புதர்கள் நிறைந்த காட்டுப்பாதை மற்றும் ஏரி வழியாக நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

மழைக் காலம் மற்றும் ஏரியில் நீர் வரத்து உள்ள காலங்களில் இந்த மாணவர்கள் ரோட்டு வழியாக மேலும் ஒரு கி.மீ. சுற்றிச் செல்லவேண்டிய நிலை இருக்கிறது.

இதுபோன்ற பல காரணங்களால் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். பூம்பூம் மாட்டு இனத்தைச் சேர்ந்த இந்து ஆதீயன் எனப்படும் பழங்குடி மக்கள், பிழைப்புக்காக தினமும் அருகில் உள்ள செய்யாறு, கலவை, ஆரணி, ஆற்காடு ஆகிய நகரங்களுக்கு பூம்பூம் மாட்டை ஓட்டிக் கொண்டு செல்வதால், குழந்தைகள் படிக்க வசதியாக தங்கள் கிராமத்திலேயே பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர்.

இவர்களது கோரிக்கை நிறைவேறுமா என்பது குறித்து 2013 அக்டோபர் மாதத்தில்  "தினமணி'  நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

செய்தியின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சகாயபுரம் மாணவர்களை காலை நேரத்தில் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலை நேரத்தில் வீட்டுக்கு அழைத்து வரும் வகையில் வேன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்கள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வேனின் தொடக்க நிகழ்ச்சி சகாயபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.சக்திவேல், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் துரைஅரசு, தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், கிராம கல்விக் குழுத் தலைவர் கிரண்பிரசாத், சகாயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பூச்செண்டு, பார்த்தீபன் மற்றும் சகாயபுரம் பஞ்சாயத்து கிராம மக்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் இப்பகுதி மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க புளூந்தை நடுநிலைப் பள்ளிக்கு வேனில் ஆனந்தமாய் பயணமானார்கள்.

இதே போன்று, செய்யாறு ஒன்றியத்தைச் சேர்ந்த பூ மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 17 மாணவர்கள் பாப்பாந்தாங்கல் பள்ளியில் படித்து வரவும், பரதந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 32 மாணவர்கள் மேலப்பட்டு கிராமத்துப் பள்ளிக்குச் சென்று படித்து வர வசதியாக தனி தனியாக இரு வேன்கள் புதன்கிழமை (08.01.14) முதல் இயக்கப்படுகிறது என செய்யாறு அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.