ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஓரே ஊர்;  இரண்டு பெயர்கள்..!

செய்யாறுக்கு திருவத்திபுரம் என்று மற்றொரு பெயரும் உண்டு.  அரசு ஆவணங்களில் கூட இருவிதமாகக் குறிப்பிடப்படுவதால்,

News image
Updated On :14 ஏப்ரல் 2015, 7:12 pm

தே.சாலமன்

செய்யாறுக்கு திருவத்திபுரம் என்று மற்றொரு பெயரும் உண்டு.  அரசு ஆவணங்களில் கூட இருவிதமாகக் குறிப்பிடப்படுவதால், மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய நகரமாக செய்யாறு உள்ளது. சட்டப் பேரவைத்  தொகுதியாகவும், மாவட்டத்தின் 2-வது வருவாய்க் கோட்டமாகவும் விளங்கி வருகிறது.

செய்யாறும், திருவத்திபுரமும்..:  கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றங்கள், வேளாண்மைத் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசுக் கலைக் கல்லூரி, அரசுப் பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி, கூட்டுறவுச் சர்க்கரை ஆலை, நெடுஞ்சாலைத் துறை, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை உள்ளிட்ட மாநில அரசின் அரசு அலுவலகங்களில் "செய்யாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் கிளைகளிலும் 'செய்யாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி அலுவலகம்,  சார் பதிவாளர் அலுவலகம், நகரக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை அஞ்சலகம், தொலைபேசி நிலையம் உள்ளிட்டவற்றிலும் 'திருவத்திபுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் இரு பெயர்களில்..: நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலும் "செய்யாறு' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே துறை சார்பில் செய்யாறு-ஆரணி, செய்யாறு- காஞ்சிபுரம் ஆகிய சாலைகளில் சில இடங்களில் "செய்யாறு' என்றும், சில இடங்களில் "திருவத்திபுரம்' என்றும் மைல் கற்களில் குறித்துள்ளனர்.

 இந்த இரு பெயர் குழப்பத்தால் செய்யாறும், திருவத்திபுரமும் ஒரே ஊர் தானா? அல்லது வெவ்வேறாக என்று வெளியூர் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.

"திருவத்திபுரம்' என்று குறிப்பிட்டால்தான் கடிதம் வரும்?: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல் துறையும் திருவத்திபுரம் என்ற பெயரை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறது. கடிதத்தில், "திருவத்திபுரம்-604407' என்று குறிப்பிட்டால் மட்டுமே கடிதம் சரியாக வந்து சேரும். மாறாக, அஞ்சல் எண் குறிப்பிடாமல் செய்யாறு என்று மட்டும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினால், சில நேரங்களில் கடிதம் வந்து சேருவதில்லை என்கின்றனர் நகர மக்கள்.  

அலுவலகத்தின் பெயரும், பதிவு செய்வதும் வெவ்வேறு..: "திருவத்திபுரம்' என்ற பெயரில் இரு சார் பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில் வீடு, நிலம், மனை வாங்க விற்க விரும்பவர்கள் பத்திரப் பதிவின்போது, "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாறு நகரம்..' என்று குறிப்பிடப்பட்டே பத்திரங்கள் பதியப்படுகின்றன. ஆனால், பத்திரங்களில் அலுவலக முத்திரையாக "திருவத்திபுரம்' என்றே பதிக்கப்படுகிறது.

 இரு பெயர்கள் இருந்து வருவதால், மக்களும், இளைஞர்களும், வெளியூர் வாசிகளும் குழப்பம் அடைந்துவருகின்றனர்.

செய்யாறு பெயரிலேயே அழைக்கலாமே!

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் "செய்யாறு' என்றே குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகம், தொலைபேசி நிலையம் ஆகியவற்றில் "திருவத்திபுரம்' என்றுள்ளது.

எனவே, மாநில அரசின் சில அலுவலகங்களிலும், மத்திய அரசின் அலுவலகங்களிலும் திருவத்திபுரம் என்று அழைப்பதையும் மாற்றி "செய்யாறு' என்று மாற்றினால் பெயர் குழப்பம் தீரும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செய்யாறு நகர மக்களின் எதிர்பார்ப்பு. 

செய்யாறு ஆன சேயாறு!

செய்யாறு என்று பெயர் வந்ததற்கான காரணம் குறித்து வரலாற்று ஆய்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று ஆண் பனை பெண் பனையாக மாறிய திருத்தலமாகவும் திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. அகிலத்தைக் காக்கும் அன்னை பார்வதிதேவி ஈசனின் இடபாகத்தில் இருந்திட விரும்பி, அதற்காக தவம் செய்ய எண்ணினார். காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியில் வாழையால் பந்தல் அமைத்து சிவ பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றுகிறது. உடனே தன் இளைய மகனான முருகனிடம், இதற்காக ஒரு நதியை உருவாக்கக் கட்டளையிடுகிறார். 

முருகனும் தன் தாயாரின் கட்டளையை நிறைவேற்றும் வகையில், தன் கையில் இருந்த வேலை எடுத்து வீசுகிறார். அது அருகில் இருந்த மலையை குடைந்து நேராக நின்றது. உடனே அங்கிருந்து நீர் பெருக்கெடுத்து ஆறாக ஒடியது. தாய்க்காக முருகன் உருவாக்கிய ஆறு சேயாறு என்று அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் சொல் வழக்கில் செய்யாறு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஜவ்வாதுமலையில் தொடங்கிய ஆற்று நீர் செய்யாறுப் பகுதியில் செம்மண் நிறத்தில் செம்மை ஆறாக ஒடியதாகத் தெரிகிறது. செம்மை ஆறு தான் காலப்போக்கில் செய்யாறாக மாறியது என்றனர்.

திருவத்திபுரம் ஆன திருவோத்தூர்

திருவத்திபுரம் என்று பெயர் வந்ததற்கான காரணம் குறித்து வரலாற்று ஆய்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் எட்டாவதாக சிறந்து விளங்கியும் பனை மரத்தை தல விருட்சமாக கொண்டதுதான் திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் தேவர், முனிவர்களுக்கு வேதத்தை இறைவன் ஒதுவித்தால் ஓத்தூர் என்று பெயர் கொண்டது. அரிய அடைமொழியாம் "திரு'வை சேர்த்து "திருவோத்தூர்' என அழைக்கப்பட்டுள்ளது. 

வடசென்னையில் திருவொற்றியூரும், கடலூர் மாவட்டத்தில் திருவந்திபுரமும் இருந்ததால் திருவோத்தூர் என்கிற பெயருடன் புரம் என்று சேர்க்கப்பட்டு "திருவத்திபுரம்' என்று அழைக்கப்பட்டது. இதனாலேயே 'திருவத்திபுரம்' என்ற பெயராலேயே நகராட்சி அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் இருந்ததால், பெயர் குழப்பம் வராமல் இருக்கவே

திருவத்திபுரம் என்ற பெயர் வைக்கப்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.