ஆரணி வழியாக ரயில் பாதை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

ஆரணி வழியாக ரூ. 750 கோடியில் ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆரணி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Updated on
1 min read

ஆரணி வழியாக ரூ. 750 கோடியில் ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆரணி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொண்ட நகரமாக ஆரணி நகராட்சி விளங்குகிறது. மேலும் பட்டுச் சேலைக்கும், அரிசிக்கும் புகழ் பெற்றதாக ஆரணி விளங்குகிறது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை ஆரணி பெற்றும் ஆரணி பகுதி மக்களுக்கு ரயில் பயண வசதி இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.

ஆரணி மக்களின் சார்பில் வியாபாரிகள் சங்கம், வர்த்தகச் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அரசிடம் பல ஆண்டுகளாக ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், பாமகவைச் சேர்ந்த அரங்க.வேலு ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது அவரின் முயற்சியால் திண்டிவனத்திலிருந்து ஆரணி வழியாக நகரி வரை ரயில் பாதை அமைக்க 2006-07-ஆம் ஆண்டில் ரூ. 750 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 2008-ஆம் ஆண்டு ஆரணியில் அரங்க.வேலுவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்காக படிப்படியாக மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் பாதை திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை வழியாக நகரியைச் சென்றடையும் வகையில் 179.20 கி.மீ தொலைவுக்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆரணியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரயில் நிலையம் ரூ. 2 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆற்காட்டில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்த நிலையில் உள்ளன.

தற்போது இந்தப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் திட்டத்தைச் செயல்படுத்த மேலும் பல வருடங்களாகும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அண்மையில் மாவட்ட ஆட்சியர் அ. ஞானசேகரன் கூறியதாவது:

படிப்படியாக நிதி ஒதுக்கி வரும் மத்திய அரசு, நிகழ் ஆண்டும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ரயில் பாதை அமைக்க நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் நிலத்தின் உரிமையாளர்களால் நில ஆர்ஜிதம் செய்வதற்கு தாமதமாகி வருகிறது. இதை முடித்து விரைவில் பணி முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது ஆரணி பகுதியில் இந்தத் திட்டத்திற்கான எந்தப் பணிகளும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

ஆரணியில் இந்தப் பணிகளை விரைவுப்படுத்தினால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள், தொழிற்சாலையில் பணிபுரிவோர்கள், வியாபாரிகள், பட்டுச் சேலை தயாரிப்பாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் பயனடைவர்.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com