வானமே கூரையாய்...! பாழடைந்த வீடுகளில் பரிதவிக்கும் இலங்கைத் தமிழர்கள்
செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல், தவசி இலங்கைத் தமிழர் முகாம்களில் வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன.


செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல், தவசி இலங்கைத் தமிழர் முகாம்களில் வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன.
மேலும், எவ்வித அடிப்படை வசதி இன்றி இலங்கைத் தமிழர்கள் பரிதவித்து வருகின்றனர்.
பாப்பாந்தாங்கல் மற்றும் தவசி கிராமத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இரு முகாம்களில் உள்ள சுமார் 160 வீடுகளில் 525-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகள் சுமார் 100 பேர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்த இரு முகாம்களில் வீடுகள் மண் சுவரால் கட்டப்பட்டு, தார் சீட்டினால் மேற்கூரை வேயப்பட்டு இருந்தன.
சில ஆண்டுகளிலேயே வீடுகள் சேதமடைந்ததால், மேற்கூரை மட்டும் சிமென்ட் சீட்டினால் புனரமைக்கப்பட்டது.
பின்னர், சிமென்ட் சீட்டுகளும் சேதம் அடைந்ததால், கடந்த 2013ஆம் ஆண்டில் சீமை ஓடுகளாக மாற்றியமைக்கப்பட்டன.
சீமை ஓடுகளுக்கு பிடிமானமாக கீழ் பகுதியில் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. அவைகளும் சில மாதங்களிலேயே சேதமடைந்து, வளைந்து ஓடுகள் சரிந்து ஓட்டை ஒடிசலாகக் காட்சியளிக்கின்றன. மழை காலங்களில் மக்கள் அருகில் உள்ள கோயில், தேவாலயங்களில் தஞ்சம் அடையவேண்டிய நிலை நீடிக்கிறது.
மக்களின் எண்ணிக்கைக் கேற்ப போதிய கழிப்பறை வசதியும் முகாம்களில் இல்லை எனக் கூறப்படுகிறது.
பாப்பாந்தாங்கல் முகாம்
இந்த முகாமில் சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்த நிலையில் உள்ளது. 2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தவசி முகாம்
தவசி கிராம முகாமில் அனைத்து வீடுகளும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
மேற்கூரையே இல்லாத வீடுகளில் பலர் வசித்து வருகின்றனர். சிலரது வீடுகளில் மேற்கூரை தார் சீட்டினால் வேயப்பட்டுள்ளது. சிலர் தென்னை ஓலைகளால் மேற்கூரை அமைத்துள்ளனர்.
2014-2015ஆம் ஆண்டு, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
சான்றுகள் பெற முடியாமல் தவிப்பு
முகாம் வாசிகள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தாலும், அதற்கான பெயர் மாற்றம் செய்யத் தேவையான சான்று அளிக்கப்படவில்லையாம். வாகனங்கள் புதிதாகவோ அல்லது பழையதாகவோ வாங்கினால், உரிமைக்கான பெயர் மாற்றம் செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
கோரிக்கை மனு
பாழடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும் என்று, இரு முகாம் வாசிகள், செய்யாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...