அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரத்த தட்டணுக்கள் கணக்கிடும் கருவியை திமுக வழங்கும்: எ.வ.வேலு எம்எல்ஏ
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 48 மணி நேரத்துக்குள் ரத்த தட்டணுக்களை கணக்கிடும் பிளேட்லெட் கருவி வழங்கப்படும்


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 48 மணி நேரத்துக்குள் ரத்த தட்டணுக்களை கணக்கிடும் பிளேட்லெட் கருவி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறி 12 நாள்களாகியும் அந்தக் கருவி வழங்கப்படாததால், அந்தக் கருவியை திமுகவே வழங்கும் என்று திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த திமுக சார்பில் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்குகிறோம். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மூலமும், வாகன விளம்பரம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அண்மையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசு மருத்துவக் கல்லூரிக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களைக் கணக்கிடும் பிளேட்லெட் கருவியை 48 மணி நேரத்தில் வழங்குவேன் என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் கூறிச் சென்று 12 நாள்களாகியும் பிளேட்லெட் கருவி வழங்கவில்லை.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அவரது வாக்குறுதி பொய்த்துப்போய் விட்டது.
எனவே, நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான பிளேட்லெட் கருவியை தமிழக அரசு வழங்காவிட்டால், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திமுகவே அந்தக் கருவியை வழங்கும்.
நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை ரூ.13.50-ல் இருந்து ரூ.25-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இது பெரிய சுமை. தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள 1.90 கோடி பேருக்கும் இது மிகப்பெரிய சுமைதான்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு தமிழக அரசு கையெழுத்துப் போட்டதன் விளைவுதான் இன்றைக்கு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. கையெழுத்து போடாமல் இருந்திருந்தால் சர்க்கரை விலை ஏறி இருக்காது என்றார்.
பேட்டியின்போது, திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஒன்றிச் செயலர் த.ரமணன், முன்னாள் ஊராட்சித் தலைவர்
இர.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...