/

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள்

Updated On :9 ஏப்ரல் 2018, 11:39 pm

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 9.54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 
உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் சிறு, குறு தொழில் வங்கிக் கடன் மானியமாக ரூ. 10 ஆயிரம் வீதம் 67 பேருக்கு ரூ. 6 லட்சத்து 70 ஆயிரமும், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், 56 கிராம் தங்க நாணயங்களும்,  மேலும் 8 பேருக்கு ரூ. 24 ஆயிரத்தில் சக்கர நாற்காலிகள்,  2 பேருக்கு ரூ. 10,800 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ. 9.54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் -  சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் ஜான்சி உள்ளிட்ட அரசுத் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.