ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மருத்துவ வசதி இல்லாத ஏனாதவாடி கிராமம்: ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

செய்யாறு அருகே ஏனாதவாடி பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், இந்தப் பகுதி மக்கள்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2019, 4:33 am

தே.சாலமன்

செய்யாறு அருகே ஏனாதவாடி பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏனாதவாடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செய்யாறு சுகாதார மாவட்டம், தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலைய எல்லையில் அமைந்துள்ளது ஏனாதவாடி கிராமம். செய்யாறு ஒன்றியத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தைச் சுற்றி ஜெ.ஜெ.நகர், தளரபாடி, செங்கட்டான்குண்டில், முருகத்தாம்பூண்டி, வடுகபட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படும் இந்தக் கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஏனாதவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல நேரடியான பேருந்து வசதி கிடையாது.
நகரப் பகுதியான செய்யாறுக்கு வந்து, பின்னர் அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம்தான் தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென்று காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் பேருந்துகளை நம்பியே கிராம மக்கள் உள்ளனர். கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற விரும்பும் நோயாளிகள் ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
பூட்டிக் கிடக்கும் சுகாதார நிலையம்: ஏனாதவாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் துணை சுகாதார நிலையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலையம் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே முழுமையாக செயல்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் மூடிய நிலையிலேயே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்தக் கிராமத்துக்கென்று நியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர் மாதத்துக்கு ஓரிருமுறை மட்டும் கிராமத்துக்கு வந்து பொதுமக்களுக்கு மாத்திரை, மருந்துகளை வழங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதுவும் கருவுற்ற தாய்மார்கள் குறித்து பதிவு செய்வதற்காக மட்டுமே அவர் கிராமத்துக்கு வந்து செல்வதாகத் தெரிகிறது. 
அந்த சமயத்திலும்கூட கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை திறப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை: ஏனாதவாடி கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செய்யாறுக்கு வந்து செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததாலும், தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரு பேருந்துகள் மூலம் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாலும், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எளிதில் மருத்துவச் சிகிச்சை பெறும் விதமாகவும் ஏனாதவாடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும் ஏனாதவாடி பகுதி மக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.