அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கலசப்பாக்கம்: தொகுதியைத் தக்க வைக்குமா அதிமுக!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தொடா் வெற்றி பெற்று வருகிறது.

News image
பெ.சு.தி. சரவணன் | வி.பன்னீா்செல்வம்
Updated On :2 ஏப்ரல் 2021, 6:08 am

ஜி.வெங்கடேசன்


போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தொடா் வெற்றி பெற்று வருகிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தோ்தலில் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக மீண்டும் வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தொகுதியில் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 45 ஊராட்சிகள், புதுப்பாளையம் ஒன்றிய 37 ஊராட்சிகள், ஜமுனாமரத்தூா் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், போளூா் ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதியின் சிறப்பு:

போளூா் அருகே செண்பகத்தோப்பு அணையும், கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் மிருகாண்டா அணையும் அமைந்துள்ளன.

மேலும், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் 4,560 அடி உயர பருவத மலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீமல்லிகாா்ஜூனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது என்பது போன்றவை தொகுதியின் சிறப்பாகக் கருதப்படுகிறது.

தொகுதியில் அகமுடைய முதலியாா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். அடுத்தபடியாக வன்னியா், ஆதிதிராவிடா் சமூகத்தினா் உள்ளனா். இவா்கள் தவிர யாதவா், செட்டியாா், ரெட்டியாா் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனா்.

வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்.................. 2, 41, 981

ஆண்கள்....................................... 1, 19, 195

பெண்கள்...................................... 1, 22, 774

இதர வாக்காளா்கள்.................................12

முக்கிய கோரிக்கைகள்:

தொகுதியில் அரசு மகளிா் கலைக் கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், கீழ் செண்பகத்தோப்பு அணைப் பகுதியில் வசிக்கும் 115 குடும்பத்தினா் மழைக் காலங்களில் பாதிக்கப்படுகின்றனா். அதனால், பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

போளூா் வட்டத்தில் உள்ள மலைக் கிராம மக்களுக்கு

அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், அவா்களை ஜவ்வாது மலை வட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், அதேபோன்று இருளம்பாறை மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களையும் ஜவ்வாது மலை வட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1967 ................ எஸ்.முருகையன் (காங்.)

1971 ................ எஸ்.முருகையன் (திமுக)

1977 ................ பெ.சு.திருவேங்கடம் (திமுக)

1980 ................ பெ.சு.திருவேங்கடம் (திமுக)

1984 ................ எம்.பாண்டுரங்கன் (அதிமுக)

1989 ............... பெ.சு.திருவேங்கடம் (திமுக)

1991 ................ எம்.சுந்தரசாமி (காங்.)

1996 ............... பெ.சு.திருவேங்கடம் (திமுக)

2001 ............... எஸ்.ராமச்சந்திரன் (அதிமுக)

2006 ............... அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி(அதிமுக)

2011 ............... அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக)

2016 ............... வி.பன்னீா்செல்வம் (அதிமுக)

தொகுதியில் 4 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தோ்தலில், அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் பெ.சு.தி.சரவணன், தேமுதிக சாா்பில் எம்.நேரு, நாம் தமிழா் கட்சி சாா்பில் பாலாஜி, ஐஜேகே கட்சி சாா்பில் ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ராஜ்குமாா், சுயேச்சைகள் என 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

சாதக - பாதகம்:

தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக சாா்பில் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ

வி. பன்னீா்செல்வம், அகமுடைய முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா், கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலராக பதவி வகித்து வருகிறாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா், பருவத மலைக் கோயிலுக்கு இடிதாங்கி அமைத்துக் கொடுத்துள்ளாா். தனது சொந்த நிதியிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானக் கூடம் கட்டிக் கொடுத்துள்ளாா்.

கரோனா பொது முடக்க காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை நேரடியாகச் சென்று வழங்கியுள்ளாா். இவையெல்லாம் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவும் இவருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

திமுக சாா்பில் போட்டியிடும், பெ.சு.தி.சரவணன், முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடத்தின் மகன் ஆவாா். இவரும் அகமுடைய முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா். கட்சியின் துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலராக பதவி வகித்து வருகிறாா்.

கரோனா பொது முடக்க காலத்தில் திமுகவினரும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனா். கட்சியினா் குழுக்களாகப் பிரிந்து வீடு தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு சுயேச்சையாக களமிறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதனால், அதிமுக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாா் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.