இறந்தவர்களின் பலரது உடலை அடக்கம் செய்யமுடியாமல் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பொது மக்கள் தவியாய் தவித்து வருவதை அறிந்த, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் குழவினர் தாமாகவே முன் பந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை அவரவரது மத, இன, குல வழக்கப்படி அரசு விதிகளுக்குட்பட்டு வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதுப் போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஆரணி, சேத்துபட்டு, வந்தவாசி, ஆரணி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 37 வயது முதல் 83 வயதுடையவர்களில் கரோனாவினால் இறந்த ஆண்கள் 82 பேரும், பெண்கள் 39 பேருமாக மொத்தம் 121 பேரின் உடல்களை இதுவரையில் (ஜூன்.28) அடக்கம் செய்து உள்ளனர். இவர்களில் இந்து மதத்தினர் 56 பேரும், முஸ்லீம் மதத்தினர் 54 பேரும், கிறிஸ்துவர் 11 பேர் என அடங்குவர். கரோனாவினால் இறந்தவர்களின் உடலை தொடர்ந்து அடக்கம் செய்து வரும் தமுமுக இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கரோனாவினால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் சேவைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.