தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை (நவ.17) நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை இரவு வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

திருவண்ணாமலையில் 109 மி.மீ.மழை:

வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 109 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, கீழ்பென்னாத்தூரில் 90.8, தண்டராம்பட்டில் 93, செங்கத்தில் 59.8, கலசப்பாக்கத்தில் 79.2, ஜமுனாமரத்தூரில் 72.2, போளூரில் 45.9, ஆரணியில் 73, சேத்துப்பட்டில் 76.6, வந்தவாசியில் 81, செய்யாற்றில் 82, வெம்பாக்கத்தில் 93.6 மி.மீ. மழை பதிவானது.

அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு:

பலத்த மழை காரணமாக குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், செண்பகத்தோப்பு அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்துகொண்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி குப்பனத்தம் அணையிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீரும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6,800 கன அடி தண்ணீரும், மிருகண்டாநதி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

500 ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்:

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல்பயிா் நடப்பட்டு இருந்தது.

தொடா் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீா் நெல் பயிா்களை சேதப்படுத்தி உள்ளது.

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்:

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி வழிகிறது. தண்ணீா் திருவண்ணாமலை-வேலூா் சாலையை மூழ்கடித்தபடி செல்கிறது. ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள குறிஞ்சி நகா் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதேபோல, திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையிலும் வெள்ள நீா் பெருக்கெடுத்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மின் தடை:

ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

திருவண்ணாமலை, வேங்கிக்கால், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், ஆரணி உள்பட மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவு முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.