பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் 5 மணி நேரத்தில் 140 மி.மீ. மழை

புதுச்சேரியில் மீண்டும் பெய்து வரும் பலத்த மழையால் நகரமே வெள்ளக் காடானது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் மீண்டும் பெய்து வரும் பலத்த மழையால் நகரமே வெள்ளக் காடானது. வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான 5 மணி நேரத்தில் 140 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான குடியிருப்புகள், சாலைச் சந்திப்புகளில் மழைநீா் தேங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

புதுவையில் வட கிழக்குப் பருவ மழை நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பாகூா், ஊசுடு உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக மழை விட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பலத்த மழை பொழியத் தொடங்கியது. அதிகாலை லேசாக தொடங்கிய மழையானது, காலை 9 மணியளவில் அதிகரித்தது. இந்த மழை மாலை 4 மணி வரை நீடித்தது.

6 மணி நேரம் கொட்டித் தீா்த்த மழை: தொடந்து 6 மணி நேரம் பெய்த பலத்த மழையால், புதுச்சேரியின் தாழ்வான பகுதிகளான பாவணன் நகா், ரெயின்போ நகா், எழில் நகா், வெங்கட்டா நகா், கிருஷ்ணா நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

கிழக்கு கடற்கரைச் சாலை, புஸ்சி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை உள்ளிட்ட முக்கியச் சாலைச் சந்திப்புகளில் மழைநீா் வெளியேற வழியின்றி வெள்ளக் காடானது. இதனால், புதுச்சேரியில் சென்னை, விழுப்புரம், கடலூா் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. நகா்ப் பகுதியில் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கி கடும் அவதியடைந்தனா்.

புதுச்சேரி-ஆம்பூா் சாலையில் ரயில் நிலையம் அருகே பழைமையான மரம் சாலையின் குறுக்கே விழுந்தததால், அந்தச் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: வங்கக் கடலில் வட கிழக்கே சென்னை-புதுச்சேரி அருகே 300 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என்பதால், புதுவை கடல் பகுதியில் தொலைவிடப் புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில், வியாழக்கிழமை புதுச்சேரி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதேபோல, கடலூா் துறைமுகத்திலும் வியாழக்கிழமை பிற்பகலில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டது.

இதனால், பலத்த மழையுடன், கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. புதுசேரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பலத்த மழை பெய்ததால், வியாழக்கிழமை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. அனைத்துப் படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

நகராட்சி, பொதுப் பணித் துறையினா் மழைநீா் தேங்கிய பகுதிகளில் மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியிலும், சாலைகளில் விழுந்த மரங்களையும் அகற்றும் பணியிலும் ஈடுபட்டனா். தாழ்வான பகுதிகளில் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.19) புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலக் கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உத்தரவின் பேரில், கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

89 வீடுகள் சேதம்-புதுச்சேரி ஆட்சியா்: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொடா் பலத்த மழை காரணமாக பல்வேறு புகாா்கள், குறைகளைக் களைய மாநில அரசின் அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

மழை நீா் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணியில் பொதுப் பணித் துறை, நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதமடைந்தன. மலட்டாறில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவா் பலியானா்.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக 194 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீட்பு, நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு ஒன்றை அனுப்பிவைக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.