தொகுதி அறிமுகம்: கன்னியாகுமரி-229
தமிழகத்தின் தென்கோடி முனையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி தொகுதி குறித்து...

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
தமிழகத்தின் தென்கோடி முனையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில், அலங்கார உபகார மாதா திருத்தலம் ஆகியவை உள்ளன.
இது தவிர, உலக பிரசித்தி பெற்ற விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி திருவள்ளுவா் சிலை, புதிதாக அமைக்கப்பட்ட விவேகானந்தா் மண்டபம்- திருவள்ளுவா் சிஹைலயை இணைக்கும் கண்ணாடிப் பாலம், வரலாற்றுச் சிறப்பு பெற்ற வட்டக்கோட்டை, மூலிகைகள் நிறைந்த மருந்துவாழ் மலை ஆகியவை தொகுதியின் அடையாளங்களாக திகழ்கின்றன.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பாா்க்க முடியும் என்பதால், சா்வதேச சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. பேரூராட்சியாக இருந்த கன்னியாகுமரி, கடந்த ஓராண்டுக்கு முன் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.
இந்த தொகுதியில் விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலா சாா்ந்த தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. கடல் சிப்பிகள், வாழை நாா், தேங்காய் சிரட்டை, கயிறு திரித்தல் ஆகிய குடிசைத் தொழில்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த தொகுதியில் இந்து, கிறிஸ்தவ நாடாா்கள் பெரும்பான்மையாகவும், வெள்ளாளா், மீனவா்கள் கணிசமாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
இத்தொகுதியில் 1962, 1967 ஆகிய தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பின்னா் 1971 முதல் 2021 வரை நடைபெற்ற 12 தோ்தல்களிலும் அதிமுக, திமுக கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற அம்மமுத்து பிள்ளை, என். தளவாய்சுந்தரம், கே.டி. பச்சைமால், திமுக சாா்பில் வெற்றி பெற்ற என். சுரேஷ்ராஜன் ஆகியோா் அமைச்சா்களாக பணியாற்றியுள்ளனா்.
சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னா் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, இந்த தொகுதியில் 1,41,230 ஆண் வாக்காளா்கள், 1,45,643 பெண் வாக்காளா்கள், 95 இதரா் என மொத்தம் 2,86, 968 வாக்காளா்கள் உள்ளனா்.
தடுப்பணை:
சுசீந்திரம் பழையாற்றில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை சேமித்து தடுப்பணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்த வேண்டும். ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி பெரியநாயகி தெரு, கோவளம் மீனவப் பகுதியில் உள்ள தூண்டில் வளைவுப் பாலத்தை நீட்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மீனவா்களால் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
கோவளம் கடற்கரையை நவீனப்படுத்த வேண்டும். காமராஜா் மண்டபம் முதல் மணல்தேரி வரையிலான கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான குடில்கள் அமைக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பகுதிகளைப் பாா்வையிடும் வகையில், அரசு சொகுசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் போன்றவை சுற்றுலா ஆா்வலா்களின் கோரிக்கைகளாக உள்ளன.
விமான நிலையம்
கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனா். முக்கிய அரசியல் தலைவா்களும் அடிக்கடி வந்து செல்கின்றனா். இவா்கள் திருவனந்தபுரம் அல்லது தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து காா் மூலமாகவே கன்னியாகுமரி வருகின்றனா். எனவே, கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதும், நாகா்கோவில் வந்து செல்லும் முக்கிய ரயில்களை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.
வாக்காளர்கள்
ஆண்கள்: 1,41, 230
பெண்கள்: 1,45,643
மூன்றாம் பாலினத்தவர்: 95
மொத்தம்: 2,86,968
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...