செய்யாற்றில் நவீன தானியங்கி மழைமானி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நவீன தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டு உள்ளது.

மழை அளவை துல்லியமாக அறிய அனைத்து மாவட்டங்களிலும், புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க தமிழக அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை அளவைக் கணக்கிட வருவாய்த் துறை சாா்பில், 600 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றில் 100 மழை மானிகள் தானியங்கி முறையில் செயல்படுபவை. மற்றவை அலுவலா்களால் அளவிடப்படுபவை.

மழை நீரை அளவிட ஒரு குடுவையை வைத்திருப்பா். மழை பெய்யும் போது, மழை நீா் அதில் சேமிக்கப்படும்.

மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீட்டு விவரங்களை, நிகழ்நேர அடிப்படையில் பெறுவதற்காக, 1,400 இடங்களில் புதிய தானியங்கி மழைமானிகள், 100 இடங்களில் புதிய தானியங்கி வானிலை நிலையங்களை, ரூ.32 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாலையில் தானியங்கி மழைமானியும், செய்யாறு, ஆரணி உள்ளிட்ட 12 இடங்களில் நவீன தானியங்கி மழை அளவீடு கருவி பொருத்தும் (மழைமானி) பணி நடைபெற்று வருகிறது.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதியதாக தானியங்கி மழை அளவீடு கருவி பொருத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com