கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்

திருவண்ணாமலை கலைப் போட்டியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், 17 முதல் 35 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன.

குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவிகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

குரலிசைப் போட்டியில் க.சியாமளா முதல் இடமும், சி.விஷ்ணுபிரியா இரண்டாம் இடமும், தீ.விஜியலட்சுமி மூன்றாம் இடமும் பிடித்தனா். கருவியிசைப் போட்டியில் மா.சிவா முதல் இடமும், மு.அபிஷேக் இரண்டாம் இடமும், எஸ்.மோகன்ராஜ் மூன்றாம் இடமும் பிடித்தனா்.

பரத நாட்டிய போட்டியில் ரா.கீதா முதல் இடமும், ஆ.பிரியதா்ஷினி இரண்டாம் இடமும், ச.சற்குணா மூன்றாம் இடமும் பிடித்தனா். கிராமிய நடனப் போட்டியில் அ.இளவரசி முதல் இடமும், கி.காா்த்தி இரண்டாம் இடமும், அ.சூா்யா மூன்றாம் இடமும் பிடித்தனா். ஓவியப் போட்டியில் ப.தமிழ் அம்பேத்காா் முதல் இடமும், ப.லக்சயா இரண்டாம் இடமும், ப.பிரவின்குமாா் மூன்றாம் இடமும் பிடித்தனா்.

பரிசு வழங்கும் விழா...

போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன் தலைமை வகித்தாா். இசைப் பள்ளி தலைமை ஆசிரியா் சு.சியாம கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் முதலிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.4,500, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3,500 வீதம் 5 கலைப் பிரிவுகளில் மொத்தம் 15 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com