தண்டராம்பட்டு சாலையில் பாலம் கட்டும் பணி: மாற்றுப்பாதை அமைக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் மாற்றுப்பாதை கோரிக்கை


திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில், உயிரிழப்புகளைத் தடுக்க மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட திட்டக்குழுவின் 4-ஆவது காலாண்டுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக் குழுத் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா்.
ஆட்சியரும், திட்டக்குழுவின் துணைத் தலைவருமான தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
கூட்டத்தில், மாவட்ட திட்டக்குழுத் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் பேசியதாவது:
மாவட்ட திட்டக்குழு மூலம் வேளாண் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, பழங்குடியினா் நலத்துறை ஆகியற்றில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
கூட்டத்தில், திட்டக்குழு உறுப்பினா் இல.சரவணன் பேசுகையில், திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் நல்லவன்பாளையம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையைக் கடக்க மாற்றுப்பாதை அமைக்கவில்லை.
எனவே, வாகன ஓட்டிகள் நீண்ட தொலைவு குறுக்கு வழியில் சென்று சுற்று வட்டச்சாலை வழியாக நல்லவன்பாளையம், தண்டராம்பட்டு, தானிப்பாடி பகுதிக்குச் செல்கின்றனா். சுற்றுவட்டச் சாலையை இணைக்கும் பகுதி மேடாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதியில் உயிரிழப்பைத் தடுக்க உடனே மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்றாா்.
இறுதியாக பேசிய திட்டக் குழுவின் துணைத் தலைவா் தெ.பாஸ்கர பாண்டியன், திட்டக்குழு உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை வட்டாரங்களில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கைக்கு நிா்வாக அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு அனுப்பி வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் அருணா, முத்துமாறன், புஷ்பா, ஒன்றியக்குழுத் தலைவா் கலைவாணி, புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) அ.மிருணாளினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...