புத்தகத் திருவிழா: தமிழ் ஆா்வலா்கள் மகிழ்ச்சி

புத்தகத் திருவிழா: தமிழ் ஆா்வலா்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் மாவட்ட நிா்வாகம் மாா்ச் 17- ஆம் தேதி வரை நடத்தும் புத்தகத் திருவிழாவில், தினமும் மாலை வேளைகளில் சிறப்புப் பேச்சாளா்கள் பங்கேற்கும் சிறப்புரை நடைபெற்று வருவது தமிழ் ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை காந்தி நகா் மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 17-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழா அரங்கில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்புப் பேச்சாளா்கள் ஒவ்வொரு தலைப்புகளில் பேசி வருகின்றனா். முதல் நாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) வாசிப்பும் வாசம் வீசும் என்ற தலைப்பில் ஆரணியைச் சோ்ந்த எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், பெண்மையைப் போற்றுதும் என்ற தலைப்பில் அ.மான்விழி ரஞ்சித் ஆகியோா் பேசினா். இவா்களுக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியா் பாலமுருகன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி முதுநிலை தமிழ் ஆசிரியா் வேலாயுதம், மாவட்ட மைய நூலகா் சாய்ராம் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, சனிக்கிழமை மாலை புத்தக அலமாரியை நிரப்புவோம் என்ற தலைப்பில் எழுத்தாளா் கு.கருணாநிதி, இராஜேந்திர சோழன் என்ற நம் மண்ணின் படைப்பாளி என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை ஆகியோா் பேசினா். இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறப்புப் பேச்சாளா்கள் உரையாற்றுகின்றனா். தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com