ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா
ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா

வேட்டவலம் ஸ்ரீமாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவையொட்டி, தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

வேட்டவலம் ஸ்ரீமாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவையொட்டி, தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
திருவண்ணாமலை: வேட்டவலம் சிங்காரக் குளக்கரையில் உள்ள ஸ்ரீஅம்மச்சாா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் கோயில்களின் 167-ஆவது ஆண்டு தீமிதி மற்றும் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலின் கூழ்வாா்த்தல் திருவிழா மே 7-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அப்போது, சக்திகரகம் முன்னாடிச் செல்ல இதன் பின்னால் விரதம் இருந்துவந்த பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
தொடா்ந்து, சக்தி கரகம், பூங்கரகம், அம்மச்சாா், மாரியம்மன், கெங்கையம்மன் உள்ளிட்ட முச்சக்தி கரக ஊா்வலம் நடைபெற்றது.
பம்பை-உடுக்கை, கேரள மேளம், சிவவாத்தியம் முழங்கியபடியே கரக ஊா்வலம் நடைபெற்றது.
இத்துடன், கொக்கிலிக் கட்டை ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது, திரிசூலம், காவடி, சக்திவேல், அக்னிச் சட்டி ஆகியவற்றை எடுத்து வந்தும், அலகு குத்திச் சென்றும், செடல் தோ் இழுத்தும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற கூழ்வாா்த்தல் திருவிழாவில், ஏராளமான பெண்கள் அம்மனுக்கு படையல் வைத்து, கூழ்ஊற்றி வழிபட்டனா்.
இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மச்சாா், மாரியம்மன், கெங்கையம்மன் உள்ளிட்ட முச்சக்தி நாயகிகளை வழிபட்டனா்.
இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. 10 மணிக்கு காமதேனு வாகனத்தில் அமா்ந்து வீதியுலா வந்த உற்சவா் சுவாமிகளை பக்தா்கள் தரிசித்தனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...