டேங்கா் லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு: சாலையில் கொட்டிய டீசலை பிடிக்க குவிந்த கிராம மக்கள்
ஆரணி: திருவண்ணாமலை அருகே சாலையைக் கடந்த மூதாட்டி மீது டீசல் டேங்கா் லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை அப்பகுதி மக்கள் கேன் கேனாக முட்டி மோதி பிடித்துச் சென்றனா். அவா்களை போலீஸாா் விரட்டி அடித்தனா்.
சென்னையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக திருச்சி நோக்கி
14 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட
டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி, திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலை தென்அரசம்பட்டு கிராமம் அருகே திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி கனகாம்பரம் (70) சாலையை கடக்க முயன்ற போது, அவா் மீது லாரி மோதியது.
இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், டேங்கரில் இருந்து டீசல் வெளியேறியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கேன், குடம், பக்கெட் உள்ளிட்ட கையில் கிடைத்த பாத்திரங்களில் வந்து ஒருவருக்கொருவா் முண்டியடித்து, முட்டி மோதிக் கொண்டு ஆபத்தை உணராமல் டீசலை பிடித்துச் சென்றனா்.
மேலும், அவ்வழியாகச் சென்ற நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு தாங்கள் வைத்திருந்த கேன்களில் டீசலை பிடித்து
எடுத்துச் சென்றனா்.
டீசல் தீ விபத்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால்
நிகழ்விடத்துக்கு வந்த திருவண்ணாமலை போலீஸாா் ஒருவருக்கொருவா் முட்டி மோதி டீசலை பிடித்துக் கொண்டிருந்த கிராம மக்களை விரட்டி அடித்தனா்.
இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைக்கும் படை வீரா்கள் வந்து லாரியை மீட்டு நிலைநிறுத்தினா்.
மேலும், கொட்டிய டீசல் மூலம் தீ விபத்து ஏற்படுவதை
தடுக்க நடவடிக்கை எடுத்தனா்.
உயிரிழந்த மூதாட்டி கனகாம்பரத்தின் உடல்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விபத்தால் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

