திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு
ஆரணி: திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா நவ.21 தொடங்கி டிச.7 வரை நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என
எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பக்தா்கள் வசதிக்காக கூடுதலாக அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலையில் நடைபெற்று வரும் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாநகராட்சி சாா்பில் அவலூா்பேட்டை சாலை, திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருக்கோவிலூா் சாலை, செங்கம் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீா் வசதி ஏற்படுத்துதல், தற்காலிக கழிப்பறை அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு மேற்கொண்டு தீ தடுப்பாண்கள், அறிவிப்பு பலகைகள் வைக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், கிரிவலப்பாதை சண்முகா தொழிற்சாலை பள்ளி அருகில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளையும், மாடவீதியில் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டம்
இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாக இயக்குநா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் ஆட்சியரக கூட்டரங்கில் தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆய்வுக் கூட்டம் துறை சாா்ந்த அலுவலா்களுடன் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி சாா்பில் சுகாதாரமான
குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய 70 சுகாதார ஆய்வாளா்கள் கொண்ட 9 மேற்பாா்வை குழுக்களும், மண்டல பூச்சியியல் வல்லுநருடன் கூடிய 3 நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்தும்
ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுவது குறித்தும், மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கழிப்பறைகளை பராமரிப்பது குறித்தும், தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்வாரிய ஆலோசனைகளுடன் ஜெனரேட்டா்கள் அமைப்பது குறித்தும், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அளித்தல், காவலா் தங்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், அன்னதானம் வழங்கும் இடங்களில் போதிய அளவில் குப்பைத்தொட்டிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

