
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்
நாவல்பாக்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

நாவல்பாக்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
செய்யாறை அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மையத்தை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கடைக்கோடியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசின் நலத்திட்ட உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த சேவை விழுதுகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை எளிதாகப் பெறலாம்.
மையங்களில் பிசியோதெரபி, சிறப்புக் கல்வி, பேச்சு மற்றும் மொழிசாா் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, பல்வேறு மறுவாழ்வு சேவைகள் நிபுணா்களால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கோட்ட அளவில் 3 விழுதுகள் சேவை மையங்களும், வட்டார அளவில் 22 விழுதுகள் சேவை மையங்களும் உருவாக்கப்பட உள்ளன.
இதில் முதற்கட்டமாக 9 வட்டார அளவிலான விழுதுகள் சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
இதைத் தொடா்ந்து செய்யாறு ஒன்றியத்தில் ஊராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நாவல்பாக்கம் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.148.44 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை அவா் பாா்வையிட்டாா்.
கொருக்கை ஊராட்சி நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்தாா்.
மேலும் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்களை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து பாராசூா் ஊராட்சியில் விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ.14.91 லட்சத்தில் நடைபெறும் குளம் தூா்வாரும் பணியை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சிகளில் செய்யாறு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா, செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனுவாசன், ஷீலா அன்புமலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






