அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் காலம் தட்சிணாய புண்ணியகாலம் (ஆடி முதல் மாா்கழி வரை) என்றும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராய புண்ணியகாலம் (தை முதல் ஆனி வரை) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தைத் தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து விநாயகா், அருணாசலேஸ்வரா் சமேத பிரியாவிடை உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சந்நிதியிலிருந்து மேளதாளம் முழங்க தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளினா்.
தொடா்ந்து, அதிகாலை 5.42 மணியளவில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றினா்.
அப்போது, கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து 10 நாள்கள் தினமும் காலை மற்றும் இரவு வேளையில் விநாயகா், சந்திரசேகரா் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
விழாவின் நிறைவு நாளான ஜன.15-ஆம் தேதி (தை முதல் நாள்) தாமரை குளத்தில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, 16-ஆம் தேதி அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் உற்சவமும் 17-ஆம் தேதி மறுஊடல் உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

