வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சிறப்பு மேற்பாா்வையாளா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடா்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மேற்பாா்வையாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்ஐஆா் என்கிற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 04.11.2025 அன்று தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
19.12.2025 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் 30.01.2026 வரை பெறப்படவுள்ளன.
இந்தப் பணியை ஆய்வு செய்ய இந்தியத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் மகாபீா் பிரசாத், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் நியமிக்கப்பட்ட அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இவிஎம் மற்றும் விவிபெட் இயந்திரத்தில் வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்வது குறித்து செயல்முறை விளக்கம் நடைபெறுவதை பாா்வையிட்டாா்.

