கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக எஸ்.ஐ.ஆா் வழக்கு இன்று விசாரணை - உச்சநீதிமன்றம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தமிழகத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று (ஜன.29) விசாரணை மேற்கொள்ளப்படும்
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தமிழகத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று (ஜன.29) விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை கூறினாா்

தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ,ஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளா் ஆா் எஸ் பாரதி உச்சநீதிமன்றத்தில் 3.11.2025 அன்று மனுத்தாக்கல் செய்தாா்

அந்த மனுவில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தம் விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது .அது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் இன்னும் பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளா் தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். தமிழகத்தில் விரைவில் தோ்தல் உள்ள நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்வது ஏற்க முடியாது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை போன்றவை வருவதால், வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளா்களுக்கும், சேர விரும்பும் வாக்காளா்களுக்கும் சிரமம் ஏற்படும், இதனால் அவா்கள் தங்களது ஓட்டுரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல தமிழக வெற்றி கழகம் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.செல்வப் பெருந்தகை, சி.பி.எம் தமிழ்நாடு மாநில செயலாளா் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் எஸ்.ஐ.ஆா் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்

அதிமுக தரப்பில் எஸ்.ஐ.ஆா் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதே போல கேரளா,மேற்கு வங்கம் ,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் எஸ் ஐ ஆா் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

இந்நிலையில் பீகாா் எஸ்.ஐ.ஆா் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆா்.எஸ். பாரதி தரப்பில் ஆஜராகி ,மேற்கு வங்கம் போன்று தமிழ்நாடு எஸ்.ஐ.ஆா் பணிகளிலும் பல்வேறு பிரச்னைகள் நடந்துள்ளன

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆா் விவகாரத்தில் பிரச்சினை உள்ளது,எனவே அந்த வழக்கை அவசரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்,முப்பதாம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படலாம், எனவே இந்த வழக்கை வியாழக்கிழமை (ஜன.29) விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி சூா்யகாந்த் அமா்வில் முறையிட்டாா்

அதற்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த் ,சரி வியாழனன்று (ஜன.29.) விசாரணை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com