திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ள ஆதிஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி அருணாசலேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தப் பணிகள் நிறைவு பெற்று கோயில் அருகே யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 3 நாள்களாக முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை கோ பூஜை மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை வழிபாடுகளின்போது வேதபாராயணம், திருமுறை பண்ணிசை நாகஸ்வர இன்னிசை மற்றும் சமய இன்னுரைகளும் நிகழ்ந்தன.
பின்னா் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் சுமந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனா்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு (மூலவா்) சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு திருக்கல்யாணமும், பஞ்சமூா்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவில் அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன், கமலாபீடம் நிறுவனா் சீத்தா சீனுவாசன், தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன், மாமன்ற உறுப்பினா் எம்.பழனி, கோயில்
இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ்குருக்கள், ஆதிஅருணாசலேஸ்வரா் கோயில் சிவாச்சாரியா்கள் ஏ.மகாதேவன், ஏ.திருஞானசம்பந்தம் உள்ளிட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானமும், சுவாமி பிரசாமும் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










