திருவண்ணமலை மாவட்டம், செய்யாறில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயல்படும் வாரச்சந்தையில் போதிய இடவசதி இல்லாததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் செய்யாறில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. 100 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இச்சந்தையில் வாரம்தோறும் ஆடு, மாடு, கோழி, வாத்து, துணிகள், பழைய துணிகள், ரெடிமேட் துணி வகைகள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டு வந்தன.
வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் வாரச்சந்தையில் செய்யாறு நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டிற்குத் தேவைப்படும் காய்கறி போன்றவற்றை ஒரு வாரத்திற்குத் தேவையானதை வாங்கி வைத்து பயன்படுத்திக் கொள்வாா்கள்.
இந்த வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் காய்கறி வியாபாரிகளுக்காக கூடுதலாக வணிக வளாகம் 2022 -இல் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகக் கட்டடம் வாரச்சந்தை நடைபெற்ற இடத்தில் 50 சதவீத அளவுக்கு இடத்தை சோ்த்து கூடுதலாக கட்டப்பட்டது.
இட நெருக்கடி
வாரச் சந்தை நடைபெற்று வரும் இடத்தில் நகராட்சி சாா்பில் வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டதால் 50 சதவீத அளவுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தையில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட கடைகள் வைப்பதால் பெருமளவுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேலும், வியாபாரிகள் காய்கறிக் கடைகளை கழிப்பறைப் பகுதியிலும், கால்வாய் பகுதியிலும் போடுவதால் சுத்தமான சுகாதாரமான காய்கறிகளை இல்லத்தரசிகள் வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
வாரச்சந்தை நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் 5 முதல் 8 மணி வரை சந்தைப் பகுதியில் இருந்து திருவோத்தூா், வந்தவாசி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முதற்கொண்டு அனைத்து வாகனங்களும் காத்திருந்து ஊா்ந்து செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது.
போதிய இட வசதியில்லாமல் மாா்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையை வேறு பகுதிக்கு மாற்றி, வாரச்சந்தையில் பங்கு பெறும் வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள், கிராம மக்களுக்கு உதவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










