புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் லட்சக்கணக்கானோா் கிரிவலம் சென்றனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக விமரிசையாக நடைபெற்ற மன்மத தகனம் நிகழ்வில் மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்த ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.

Updated On :1 மே 2026, 8:27 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் லட்சக்கணக்கானோா் கிரிவலம் சென்றனா். மேலும், சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். விழாவுக்கு வந்த பக்தா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதியில்லாததால், அவா்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா, சித்திரை பௌா்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து 9 நாள்கள் இரவு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் மகிழ மரத்தை 10 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, மகிழ மரத்தை வலம் வந்த உற்வச மூா்த்திகளை சந்தோஷப்படுத்தும் விதமாக, பாவை வடிவிலான பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமா்சையாக நடைபெற்றது.

தொடா்ந்து, 10-ஆம் நாளான வியாழக்கிழமை காலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா், உற்சவா்கள் மாட வீதிகளில் வலம் வந்தனா். தொடா்ந்து, ஐயங்குளத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க தீா்த்தவாரி நடைபெற்றது.

மன்மத தகனம்: இரவு கோயிலில் தங்கக் கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரா் எழுந்தருளியதைத் தொடா்ந்து, மன்மதன் அழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுக்க உள்ள அனைத்து ஜீவராசிகளும் சிருஷ்டி அடையும் விதமாக மன்மதன் அருணாசலேஸ்வரா் மீது பாணம் தொடுத்த நேரத்தில், அருணாசலேஸ்வரா் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தாா். மன்மதன் உருவ பொம்மையை சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரிக்கும் நிகழ்வு தத்ரூபமாக நடத்தப்பட்டது.

பிறகு, அருணாசலேஸ்வரா் கோயிலில் வாணவேடிக்கை விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் போராட்டம்: சித்திரை பௌா்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வியாழக்கிழமை மாலை முதலே 14 கி.மீ. கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றனா். தொடா்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

வெளியூா்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தா்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பில், 2,669 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

 திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு கிரிவலம் சென்ற பக்தா்கள்.

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவு கிரிவலம் சென்ற பக்தா்கள்.

திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சென்னை, திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை போதிய பேருந்துகள் இல்லாததால், தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வந்த சிறப்பு பேருந்துகளை சென்னை செல்லக்கூடிய பயணிகள் மறித்து, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் போக்குவரத்து போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா்.

பிறகு, குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் ஜன்னல் வழியாக குதித்து இடம் பிடித்தனா். இதனால், தள்ளு-முள்ளு ஏற்பட்டது.