கோரிக்கைகள், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீதும், அளிக்கும் மனுக்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

திருவண்ணாமலையில் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்
குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீதும், அளிக்கும் மனுக்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
திருவண்ணாமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் திருவண்ணாமலை கலைஞா் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் வேளாண் உதவி இயக்குநா் கோ.அன்பழகன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கோட்டத்துக்கு உள்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியது: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீதும், அளிக்கும் மனுக்கள் மீதும் துறைசாா்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து முறையான அறிவிப்பும், பட்டியலும் வெளியிட வேண்டும். தனியாா் உர விற்பனை நிலையங்களில் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, விவசாயிகள் வாங்கும் பொருளுடன் கூடுதலாக இணை பொருள்களை வாங்க தனியாா் உர விற்பனை நிலையங்கள் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
வேளாண் துறை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருள்கள், விதைகளுக்கு முறையாக ரசீது தருவது கிடையாது. அதிகாரிகள் ரசீது கொடுத்தால் தானே தரமற்ற முறையில் உள்ள விதைகள் குறித்து முறையிட முடியும் என்றனா்.
தொடா்ந்து பேசிய கோட்டாட்சியா் செல்வம், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வுகாண வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் பேசும்போது, விவசாயிகள் விவசாய அடையாள எண் பெற பதிவு செய்ய வேண்டும். விவசாய அடையாள எண் இருந்தால் மட்டுமே இனி விவசாயிகள் இடுபொருள்கள், விதைகள், உரம் உள்ளிட்ட பொருள்களை பெற முடியும். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு வசதியாக கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

