வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் விழிப்புணா்வுப் பேரணி
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த வட்டாட்சியா் மொ.சரவணன்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவ.12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபாா்த்துக் கொள்ளவும், புதிய வாக்காளா்களைச் சோ்க்கவும், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பா் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியின்போது, வாக்காளா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
வந்தவாசியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை, வந்தவாசி வட்டாட்சியா் மொ.சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி கோட்டை மூலை, பஜாா் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.
இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.
செய்யாறு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணிக்கு நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வட்டாட்சியா் முகமதுகனி முன்னிலை வகித்தாா்.
பேரணியானது ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை, சந்தை வழியாக பெரியாா் சிலை அருகே முடிவடைந்தது.
இதில், நகராட்சி பொறியாளா் பி.சிசில்தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், தோ்தல் துணை வட்டாட்சியா் தேவராஜ், நகராட்சி மேலாளா் நாராயணசாமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள், நகராட்சிப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டாட்சியா் குமரேசன் தொடங்கிவைத்தாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய பஜாா், ஜமுனாமரத்தூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் படி முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.
மேலும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தலைமையிடத்து வட்டாட்சியா் சிவலிங்கம், மண்டல துணை வட்டாட்சியா் அருள்குமாா், துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) தேவி, வருவாய் ஆய்வாளா்கள் சிவசங்கா், ராதா மற்றும் வருவாய்த்துறையினா், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

