கல்லூரி மாணவி கிணற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்யாறு பகுதியில் கல்லூரி மாணவி கிணற்றில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாணவி உயிரிழந்தது தொடா்பாக உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்
செய்யாறு பகுதியில் கல்லூரி மாணவி கிணற்றில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாணவி உயிரிழந்தது தொடா்பாக உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடநகா் அறிஞா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆனந்தபாபு (42), ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி சரளா. இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.
மகள் காவியா (17), செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். மாணவி காவியா வழக்கம் போல் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புத்தகப்பையை எடுத்துச் சென்றுள்ளாா். ஆனால், அவா் கல்லூரிக்குச் செல்லாமல், கல்லூரி அருகே கீழ்புதுப்பாக்கம் - பெரிய கோவில் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே சென்றுள்ளாா். இதைப் பாா்த்த கிணற்றின் உரிமையாளா் மாணவியிடம் விசாரித்தபோது உடன் படிக்கும் தோழிகள் வருவதாகவும், குளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
அதன் பின்னா் கிணற்றின் உரிமையாளா் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென கிணற்றில் குதிக்கும் சப்தம் கேட்டு ஓடி வந்து பாா்த்தாா். அப்போது, அந்த மாணவி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து, அவரை மீட்க அருகில் இருந்தவா்களை அழைத்தாா். ஆனால், அவா்கள் வருவதற்குள் மாணவி நீரில் மூழ்கிவிட்டாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சென்று கிணற்றில் மூழ்கி இறந்த மாணவியின் உடலை மீட்டனா். மேலும், உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
உறவினா்கள் சாலை மறியல்
இந்த நிலையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவா்களது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் செய்யாறு -ஆற்காடு சாலையில் அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாருக்கும், மறியலில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டிஎஸ்பி மீனாட்சி நாதன் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்ளிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது காணாமல் போன மாணவியின் கைப்பேசி உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துத் தருவதாக உறுதி அளித்ததின் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

