ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மேயரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

குப்பைகளை 2 மாதங்களுக்கு சதுப்பேரியில் கொட்டுவதற்கு அனுமதி கோரி பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மேயர், மாமன்ற உறுப்பினர்களை கிராம மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகையிட்டனர்.

Updated On :

குப்பைகளை 2 மாதங்களுக்கு சதுப்பேரியில் கொட்டுவதற்கு அனுமதி கோரி பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மேயர், மாமன்ற உறுப்பினர்களை கிராம மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகையிட்டனர்.

வேலூர் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 20 டன் குப்பைகள் சதுப்பேரி கிராமத்தில் உள்ள குப்பைக் கிடங்குகளில் சில ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தன. மலைபோல் குவிந்த இந்தக் குப்பையால் சுற்றுப்புறக் கிராமங்கள் சுகாதாரச் சீர்கேட்டை சந்தித்த நிலையில், கிராம மக்கள் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.

இந்த நிலையில், சதுப்பேரியில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று, "எந்தக் காரணம் கொண்டும் இனி கிராமத்தில் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார்.

இதையடுத்து, மாற்று இடமாக காட்பாடியை அடுத்த 66 புத்தூர் கிராமத்தில் உள்ள பகுதியைத் தேர்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 8 நாள்களாகச் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என தெரியாமல் அந்தந்த வார்டுகளில் ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டனர். இதில், பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், மேயர் பி.கார்த்தியாயினி தலைமையில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆணையர் ஜானகி, துணை மேயர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக, அதிமுக உறுப்பினர்களின் கடுமையான விவாத்துக்கு பின்னர், சதுப்பேரி மக்களை சந்தித்து இன்னும் 2 மாதங்களுக்கு மட்டும் குப்பைகளை கொட்ட அனுமதி கோருவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிராமத்துக்குச் சென்ற மேயர், மாநகர்மன்ற உறுப்பினர்களை கிராம மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது குப்பைகள் கொட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என கிராம மக்கள் உறுதியுடன் தெரிவித்தனர். பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷையும் சந்தித்து பேசியும் சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, அனைவரும் திரும்பினர்.

திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதே தீர்வு!

வேலூர் மாநகரில் உள்ள 4 மண்டலங்களிலும் துப்புரவுப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்கள் அந்தந்த தெருக்களில் 3 சக்கர சைக்கிள்கள் மூலம் குப்பைகளை சேகரிக்கின்றனர். அத்துடன் அந்தந்த தெருக்களில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டு, அவை நிரம்பியதும் குப்பைத் தொட்டிகளை தானியங்கி முறையில் ஏற்றி கொட்டும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் பணியும நடைபெறுகிறது. இந்தப் பணியில் 800-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் குப்பைகளை நீண்டகாலமாக சதுப்பேரியில் கொட்டி வந்ததால் பிரச்னை எதையும் மாநகராட்சி சந்திக்காமல் இருந்தது. தற்போது சதுப்பேரி மக்கள் தொடர்ந்து போராடி வருவதால் மாற்று இடத்தை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டது. மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்த இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு தொடக்கத்திலேயே எழுந்துள்ளது.

இந்த நிலையில், சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளாக பிரித்து மக்கும் குப்பைகளை எருவாகவும், மக்கா குப்பைகளை மறுசுழற்சிக்கு விற்பனைக்கு அனுப்பவும் மேற்கொண்டால் மட்டுமே

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். அத்துடன் அந்தந்த வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த இடம் தேர்வு செய்து செயல்படுத்துவதே இதற்கு ஒரே வழி என அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.