3 ஆண்டுகளாகியும் காய்க்காத வீரிய ஒட்டுச் செடிகள்
நடவு செய்து 3 ஆண்டுகளாகியும் எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட வீரிய ஒட்டுச் செடிகள் காய்க்காமல், பூக்காமல் பட்டுப்போனதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


நடவு செய்து 3 ஆண்டுகளாகியும் எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட வீரிய ஒட்டுச் செடிகள் காய்க்காமல், பூக்காமல் பட்டுப்போனதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஆந்திரத்தைச் சேர்ந்த தனியார் நர்சரியின் இந்த மோசடியால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பாலாறு, பொன்னை ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும், கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தின் எல்லையோரங்களிலும் உள்ள விவசாயிகள் கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நர்சரி நிறுவனத்தில் இருந்து எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற வீரிய ஒட்டு ரகச் செடிகளை வாங்கி பயிரிட்டுள்ளனர்.
ஆனால், அந்தச் செடிகள் இதுவரை பூக்கவும், காய்க்கவும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, ஏராளமான நஷ்டத்தையும் சந்தித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து யாரிடம் புகார் கூறுவது, என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கீழ்பள்ளேரியைச் சேர்ந்த விவசாயி ராஜா கூறியதாவது: பருவமழை பொய்த்து விட்டதாலும், பாலாறு, பொன்னை ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு விட்டனர்.
ஒரு சில விவசாயிகள் மட்டும் கிணற்று நீர்ப்பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோன்ற விவசாயிகளைக் குறி வைத்து, ஆந்திர மாநில நர்சரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறைந்த தண்ணீரைக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் உடனடியாக விளைச்சல் தரக்கூடிய தென்னை, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, தேக்கு உள்ளிட்ட வீரிய ஒட்டு ரகச் செடிகளை நட்டு லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம் என்று விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி, அதிக அளவில் காய்த்துள்ள புகைப்படங்களை கிராம விவசாயிகளிடம் காண்பித்து மூளைச் சலவை செய்து, வீரிய ஒட்டு கன்றுகளை விற்று விட்டனர்.
மேலும், மாதாமாதம் தாங்கள் வந்து பார்வையிட்டு உரங்கள் கொடுப்பதாகவும் கூறிச் சென்றனர். இதை நம்பி பொன்னை, வசூர், பள்ளேரி, மாதண்டகுப்பம், விண்ணம்பள்ளி மகிமண்டலம் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் செடிகளை வாங்கி பல ஏக்கர் பரப்பளவில் நடவு செய்தனர்.
ஆனால், 3 ஆண்டுகளைக் கடந்தும் மேற்கண்ட விவசாயிகளின் நிலத்தில் பயிரிடப்பட்ட செடிகள் 3 அடி உயரம்கூட வளரவில்லை. மேலும், அந்தச் செடிகளில் பூப்பூக்கவும், காய் காய்க்கவும் இல்லை. இதனால், அந்த விவசாயிகள் பணத்தைச் செலவு செய்து விட்டு நஷ்டத்தைச் சந்தித்தவுடன், அந்தச் செடிகளை பராமரிக்க முடியாமல் நிலங்களை தரிசாக விட்டு விட்டனர் என்றார் ராஜா.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபோன்ற மோசடி நர்சரி நிறுவனங்களிடம் இருந்து வீரிய ஒட்டுச் செடிகளை வாங்காமல், அரசு தோட்டக்கலைப் பண்ணையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நர்சரி நிறுவனங்களில் மட்டுமே செடிகளை வங்கி நட்டுப் பயனடைய வேண்டும் என இதர விவசாயிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற நர்சரி நிறுவனங்களை மாவட்ட தோட்டக்கலைத் துறை நிர்வாகம் கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கடந்த 19-ஆம் தேதி ஆந்திர மாநில நர்சரி நிறுவனம் ஒன்று வீரிய ஒட்டுச் செடிகள் வழங்குவதாகக் கூறி பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்து கொண்டு, செப்டம்பர் 1-ஆம் தேதி அனைவருக்கும் வீரிய ஒட்டுச் செடிகள் வழங்கப்படும் என ரசீது வழங்கியுள்ளனர். அவர்களிடம் பணம் கட்டிய விவசாயிகள் மீண்டும் செடிகளை வாங்கி ஏமாந்துவிட வேண்டாம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்பள்ளேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி எல்லம்மா கூறியதாவது:
ஆந்திரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள், எங்களது கிராமத்தில் செடிகளை விற்பனை செய்தார்கள். நன்கு வளர்ந்த செடிகளின் புகைப்படங்களைக் காண்பித்தார்கள். இதை நம்பி தென்னை, கொய்யா, எலுமமிச்சை செடிகள் வாங்கி வீட்டு பின்புறம் நட்டு வைத்தோம். ஆனால் அவை வளரவும் இல்லை, காய்க்கவும் இல்லை என்றார்.
ஏமாற வேண்டாம்: வேளாண் அதிகாரி எச்சரிக்கை
அரசு அங்கீகாரம் இல்லாத, தனியார் நர்சரி பண்ணைகளில் தென்னை, மா உள்ளிட்ட வீரிய ஒட்டுரகச் செடிகளை அதிகப் பணம் செலவு செய்து வாங்கி ஏமாற வேண்டாம் என வாலாஜா வட்டார உதவி வேளாண்மை அலுவலர் முனியப்பன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக்கில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னை, மா, கொய்யா, முந்திரி, பப்பாளி, மல்லிகை ஆகிய செடிகள் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர விவசாயிகள் தங்களது நிலங்களில் சுமார் 1 முதல் 5 ஏக்கர் வரையிலான பரப்பளவில் மா, எலுமிச்சை உள்ளிட்ட பழத் தோட்டங்கள் அமைக்க அரசின் தோட்டக்கலைத் துறை வழிகாட்டுகிறது. இதற்காக 100 சதவீத மானியத்தில் வீரிய ஒட்டு ரக பழச் செடிகளை அளித்து நடவு முதல் பராமரிப்பு வரை வேளாண்மைத் துறை அலுவலர்கள் உதவிபுரிகின்றனர். எனவே விவசாயிகள் 100 சதவீதம் நம்பிக்கையுடன் வாங்கி நடவு செய்து வருவாய் ஈட்டலாம்.
மாறாக, அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் நர்சரி பண்ணைகளில் செடிகளை வாங்கி நடவு செய்ய வேண்டாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...