/

திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கும் அரசு கலைக் கல்லூரிக் கட்டடம்

அரக்கோணத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ. 7.25 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாததால், தற்காலிகக் கட்டடத்தில் மூன்று ஷிப்டுகளாக கல்லூரி வெகு சிரமங்களினிடையே நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :30 செப்டம்பர் 2015, 9:22 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ. 7.25 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாததால், தற்காலிகக் கட்டடத்தில் மூன்று ஷிப்டுகளாக கல்லூரி வெகு சிரமங்களினிடையே நடத்தப்பட்டு வருகிறது.

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது. பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பி.ஏ, பி.சி.ஏ, பி.காம், பி.எஸ்சி. என ஆறு வகுப்புகளுடன் திறக்கப்பட்ட இக்கல்லூரி முதல் வருடம் ஆறு வகுப்புகளுடன் தொடங்கப்பட்டது.

ஆறு வகுப்புகள், முதல்வர், பேராசிரியர் அறைகள், ஆய்வகம் என பள்ளியின் புதிய கட்டடத்தில் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

ஒரு வருடம் முடிந்த நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மேலும் ஆறு வகுப்புகளுக்கு இடம் தேவைப்பட்டது.

இடம் இல்லாத நிலையில் ஷிப்டு முறைக்கு வகுப்புகள் மாற்றப்பட்டு காலையிலும் மாலையிலும் கல்லூரி நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இடமின்மையால், மாநிலத்தில் எங்கும் இல்லாதவாறு மூன்று ஷிப்ட்களாக கல்லூரி நடத்தப்பட்டது.

இக்கல்லூரியில் வகுப்புகள் காலை 7.30, 11.15, மதியம் 2.15 மணி என மூன்று ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. தலா மூன்று மணி நேரம் ஒவ்வொரு ஆண்டுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஷிப்டு முறை கல்லூரியால் மாணவர்களும், பாடங்களை நடத்தும் ஆசிரியர்களும் வெகு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கல்லூரிக்கு 10 கி.மீ.க்கும் மேற்பட்ட தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் காலை 7.30 மணிக்குள் வர சரியான போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமமடைந்தனர். மேலும் பேராசிரியர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரிக்கு ரூ.7.25 கோடி நிதியில் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி, அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் கட்டடப் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. தற்போது இக்கட்டடம் கட்டி முடித்து திறப்பு விழாவுக்குத் தயாராக இருக்கிறது. இக்கட்டடத்தில் 30 வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள், முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அறைகள், நூலகம், கணிணி அறைகள் என நிகழ்கால தேவைகளுடன் சிறப்பாக கட்டடம் கட்டிக்கப்பட்டு உள்ளது. 2015 ஜூன் மாதம் கட்டடம் திறக்கப்பட்டு விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கட்டடம் இன்று வரை திறப்பு விழா காணாமல் உள்ளது. இக்கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதால் வெகு சிரமத்துடன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

எனவே, ஆட்டுப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு விரைவில் திறப்பு விழா நடத்தி கல்லூரியை நிரந்தரமாக அங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே மாணவ, மாணவிகள், பேராசிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.