/

அறிவிப்போடு நிற்கிறது அரக்கோணம் மேம்பாலம்!

அரக்கோணம் தொகுதியைப் பொருத்த வரை கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் தொகுதியின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் நகரின் மிக முக்கிய பிரச்னையே போக்குவரத்து நெரிசல் தான்.

News image
Updated On :9 ஏப்ரல் 2016, 6:03 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம் தொகுதியைப் பொருத்த வரை கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் தொகுதியின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் நகரின் மிக முக்கிய பிரச்னையே போக்குவரத்து நெரிசல் தான்.

நகரின் முக்கிய சாலையான காந்தி ரோட்டை அகலப்படுத்தும் பணி கண்துடைப்பாக நடந்ததே தவிர, உண்மையாக நடைபெறவில்லை. சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டும், நகர மேம்பாலப் பணி தொடங்கப்படவில்லை. இது பொதுமக்களுக்கு மிகப் பெரும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

அரக்கோணம் நகரைப் பொருத்த வரை மிக முக்கியமான சாலை காந்தி ரோடு. இச்சாலை 1, 2, 3, 4, 5 என ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.கேட் அருகே ஆரம்பிக்கும் இச்சாலை ஜோதி நகரில் முடிவடைகிறது.

இச்சாலை பல இடங்களில் அகலமாகக் காணப்பட்டாலும் மிக முக்கிய இடமான பஜார் பகுதியில் மசூதி அருகில் மிகவும் குறுகலாக உள்ளது. திருவள்ளூர் சாலைக்குச் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் வேறு வழி இல்லாததால் இச்சாலையிலேயே செல்ல வேண்டியுள்ளது.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி கடைகளின் பெயர்ப் பலகைகளை மட்டும் அகற்றிய நெடுஞ்சாலை நிர்வாகம், சரியானபடி செயல்பட்டு அரக்கோணம் நகரில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

இச்சாலையை அகலப்படுத்த வேண்டும், ரயில்நிலையம் அருகே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக விதி எண் 110-இன்கீழ் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டு ஓராண்டு ஆகியும், இதற்கான நிதி ரூ. 68.25 கோடி ஒதுக்கப்பட்டும், பணிகள் தொடங்கவில்லை. ஆரம்பத்தில் மண்பரிசோதனை நடத்தியதோடு சரி, பணிகள் நடைபெறுவதற்கான முகாந்திரமே காணவில்லை.

அரக்கோணம் நகரின் அடுத்த முக்கிய கோரிக்கை, புறவழிச்சாலை. அரக்கோணம்- திருவள்ளூர் சாலைக்கு புறவழிச்சாலை தேவை என பல ஆண்டுகளாக கோரப்படுகிறது. பல கனரக வாகனங்கள், குறிப்பாக திருவாலங்காடு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஊருக்குள் வந்து செல்வதைத் தடுக்க புதிய புறவழிச்சாலை அமைத்தால் மட்டுமே அரக்கோணம் நகரின் போக்குவரத்து பிரச்னை தீரும்.

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையை, அரக்கோணம்- திருத்தணி சாலையோடு இணைக்கவும் புறவழிச்சாலை அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் பணி தொடங்கப்படவில்லை.

இச்சாலை அமைக்கப்பட்டால், அரக்கோணம் காந்தி ரோடு 3-இல் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.