/

எத்தனை காலம் தேவைப்படுமோ?

பொன்னேரி: தமிழகத்தில் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா மே 16-இல் நடைபெறவுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:05 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி: தமிழகத்தில் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா மே 16-இல் நடைபெறவுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களாட்சி முறை என்றும் இயங்க வேண்டும் எனில், தேர்தல் எனும் ஜனநாயக நடைமுறை மூலமாக, தனது பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கு அனுப்ப வேண்டும்.

கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்கள், தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதும், அவற்றை நம்பி வாக்காளர்கள் வாக்களிப்பதும் மரபாக மாறிவிட்டன.

வாக்களித்து வெற்றி பெற்ற பின்னர் ஒரு சில மக்கள் பிரதிநிதிகள், 5 ஆண்டுகளுக்கு தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காமல், அடுத்த தேர்தலில் மாற்றுத் தொகுதியைத் தேடிச் சென்று அங்கு போட்டியிடும் அவல நிலையும் இங்கு உள்ளது.

இதிலும் சில மக்கள் பிரதிகள், அரசு அளிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை, சமுதாய நலக்கூடம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், நிழற்குடைகள் அமைத்தல், கழிப்பிடக் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான பணிகளுக்குச் செலவிடுவதில்லை.

அதே நேரத்தில் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தும், மக்களுக்கு அதிக அளவு பயன்பாடு இல்லாத பணிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியினையை மக்கள் பிரதிநிதிகள் திசை திருப்பிவிடும் நிலையும் உள்ளது.

மக்களாட்சி முறையில் வாக்குச் சீட்டின் மூலம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமை மக்களிடம் இருந்தாலும், தாங்கள் தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பப்படுபவர்கள், மக்கள் பணியை சரியாகச் செய்யாதபோது அவர்களைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் பிரதிநிதிகள் திணறினர். அப்போது சமூகநலனில் அக்கறை கொண்ட இளைஞர் கூட்டம் களத்தில் அரும்பணி ஆற்றியது. இதுபோல சமுதாய நலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் அரசியல் களத்தில் குதித்து மக்கள்நலப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நாளைய தலைமுறை அரசியல் நன்றாக இருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

பழவேற்காட்டில் பேருந்து நிலையம், பசியாவரத்தில் மேம்பாலம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மீஞ்சூரில் அரசு மருத்துவமனை, பொன்னேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வெளிவட்டச் சாலை, புறவழிச் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நிறைவேறவில்லை.

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிப்பது, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இன்னும் எத்தனை காலம் தேவைப்படுமோ? பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்.

-எம்.சுந்தரமூர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.