மாணவர் சேர்க்கை; கல்வித் துறை கவனிக்குமா?
அரக்கோணத்தையொட்டிய கிராமப்புற பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


அரக்கோணத்தையொட்டிய கிராமப்புற பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரக்கோணத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை சதவீதம் மிகவும் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
நகரப் பகுதிகளை விட்டு சற்றே தள்ளி இருக்கும் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை சுமாராக உள்ளது. ஆனால், நகரங்களில் மெட்ரிக். பள்ளிகளின் மோகத்தால் நகரையொட்டிய கிராமப்புறப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசு அறிமுகப்படுத்தினாலும் மெட்ரிக். பள்ளிகளுடன் போட்டி போட முடியாத நிலையே காணப்படுகிறது. இதனால், பல கிராமங்களில் உள்ள பள்ளிகள் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.
குறிப்பாக அரக்கோணம் வட்டாரத்தில் எஃகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெமிலி வட்டாரத்தில் வீராநாயுடு கண்டிகை கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளி, காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் வடமாம்பாக்கம் ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி போன்றவற்றின் வருகைப் பதிவேட்டில் இரண்டு இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை இருந்தாலும் உண்மையில் ஓரிலக்க மாணவர்கள் தான் வருகை தருகின்றனர்.
இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மாணவர்களின் எண்ணிக்கையை விட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் அரசுக்கு பொருளாதார விரயம் ஏற்படுவதை கல்வித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
இதைத் தவிர்க்கவும், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவும் பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறைந்தது ஒரு பள்ளிக்கு இவ்வளவு மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணிக்கை இலக்கை அறிவிக்க வேண்டும்.
கல்வியாண்டு தொடக்கத்தில் ஆசிரியர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தைக் கிராமங்களில் நடத்துவதோடு பணி முடிந்து விட்டதாக கருதாமல் ஆசிரியர்களுக்கு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கட்டாயமாக்க வேண்டும்.
அப்படி மாணவர்கள் சேராத பட்சத்தில், அப்பள்ளியை அருகில் உள்ள பள்ளியோடு இணைத்து மாணவர்கள் வந்துசெல்ல போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும்.
அவ்வப்போது, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வுக்குச் சென்று வருகைப் பதிவேடு எண்ணிக்கையுடன் மாணவர்களின் இருப்பு எண்ணிக்கையை ஒப்பிட வேண்டும். இவைகள் நடைபெற்றால் மட்டுமே பொருளாதார விரயம் தவிர்க்கப்படும்.
இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டால், வரும் கல்வியாண்டில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் இல்லாத நிலையையும், ஓராசிரியர் பள்ளிகள் இல்லாத நிலையையும் ஏற்படுத்த முடியும்.
நகர அரசுப் பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையே?
தற்போது, நகரப் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஓரிலக்க எண்ணிக்கையில் இருக்கும் நிலையே காணப்படுகிறது.
அரசு வழங்கும் மிதிவண்டிகளைப் பெற ஒன்பதாவது வகுப்புக்கு மேல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலையும், மடிக்கணினியைப் பெற பிளஸ் 1-இல் சேரும் நிலையும் உள்ளது.
இதனால், நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை என்பதைக் கட்டாயமாக்கி உயர்நிலைப் பள்ளிகளை ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என இரண்டு வகுப்புக்களுக்காக மட்டுமே என கொண்டு வர வேண்டும்.
மேலும் ஒன்பதாம் வகுப்புகளிலும், ஒரு வகுப்புக்கு இவ்வளவு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கைக்கான நடவடிக்கையை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்வதைப் போல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...