/

27 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்:நிலமளித்தோறூக்கு வேலை வழங்காத கடற்படை நிர்வாகம்!

அரக்கோணம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய 247 குடும்பத்தினருக்கு கடற்படை நிர்வாகம் இதுவரை வேலை அளிக்காமல் காலம்தாழ்த்தி வருவதால் உணவுக்கே வழியின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

News image
Updated On :30 மார்ச் 2016, 8:21 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய 247 குடும்பத்தினருக்கு கடற்படை நிர்வாகம் இதுவரை வேலை அளிக்காமல் காலம்தாழ்த்தி வருவதால் உணவுக்கே வழியின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தத் தளம் அமைக்க ஏற்கெனவே அப்பகுதியில் அரசின் கைவசமிருந்த 1,106 ஏக்கர் நிலத்துடன், அப்பகுதியில் உள்ள புளியமங்கலம், சுகபுரம், மோசூர், செய்யூர், ஆத்தூர், பெருமூச்சி ஆகிய கிராமங்களில் இருந்து 940 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அப்போது, நிலத்தை தந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு படைத் தளத்தில் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதற்காக, அப்போதே எண் 1244/87 எனும் அரசானை வெளியிடப்பட்டதால் அனைவரும் நிலங்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, அப்போதைய நிலஎடுப்பு வட்டாட்சியர் மூலம் 540 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் 1992-ஆம் ஆண்டு ராஜாளி கடற்படை விமானதள திறப்பு விழாவுக்குப் பிறகு 156 பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. இதற்கு, அவர்களது தகுதிக்கேற்ற வேலை படைத் தளத்தில் இல்லை என காரணம் கூறப்பட்டது.

இதையடுத்து, 1996-ஆம் ஆண்டு நிலமிழந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குள் சங்கம் ஒன்றை உருவாக்கி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், 1997-இல் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், வயது வரம்பின்றி வேலை வழங்கவும், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் வேலை காலி இல்லை என்றாலும் அருகில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வேலை வழங்கவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர், 334 பேரின் பெயர்ப் பட்டியலை கடற்படை நிர்வாகத்துக்கு அனுப்பி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பணி வழங்கக் கோரினார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 1998-இல் கடற்படை விமானதள நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இவ்வழக்கு 2007-ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்த நிலையில், 2007-இல் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், நிலமிழந்தோருக்கு 50 வயது ஆகியிருந்தாலும் வயது வரம்பைத் தளர்த்தி வேலை வழங்க உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகம் வழக்கு தொடுத்த நிலையில் அது உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நிலமிழந்தோர் சங்கத்தினர் 2009-இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 274 பேருக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், தொடர்ந்து வேலை அளிக்காமல் தாமதித்து வந்த கடற்படை நிர்வாகம் திடீரென நிலமிழந்தோரிடையே தேர்வு நடத்துவதாக அறிவித்து 274 பேரில் 27 பேருக்கு மட்டும் வேலையளித்தது.

இந்நிலையில், மீதியுள்ள 247 பேரின் குடும்பங்களில் பலர் வறுமை காரணமாக குடும்பத் தலைவரை இழந்த நிலையிலும், பலர் பக்கத்து கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களாய் மாறி இன்றுவரை அன்றாட உணவுக்கே அவதிப்படும் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து நிலமிழந்தோர் சங்கத் தலைவர் மங்கள சேகரை கேட்டபோது, "நிலமிழந்தோருக்கு வேலை அளிக்காமல் காலம்தள்ளும் நிர்வாகம் மேலும் வருடங்களைக் கடத்தினால், அவர்களுக்கு வயதாகி வேலை கேட்க மாட்டார்கள் என நினைக்கிறது. பெரிய தொழில்நுட்பப் பணிகளை நாங்கள் கேட்கவில்லை. எங்களது படிப்பறிவுக்கு ஏற்ற வேலை தாருங்கள் என்று தான் கேட்கிறோம். எங்களுக்கு பணி தராமல் அலுவலகப் பணிகளுக்கு கூட வடநாட்டவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிலை தொடர்கிறது. எத்தனை முறைதான் நாங்களும் நீதிமன்றத்துக்கு செல்வது? எங்களிடம் இருந்த பணத்தை நீதிமன்றத்துக்கு செல்வதற்கே செலவிட்டு விட்டோம். இனி நீதிமன்றம் செல்வதற்குக் கூட எங்களிடம் நிதி இல்லை. இந்நிலையில், தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகத்திடம் எங்களுக்கு வேலை பெற்றுத் தர வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்றார்.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை மற்றவர்கள் ஆக்கிரமித்தால் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அவர்களை விரட்டச் செய்கின்றனர்.

அதேசமயம், தலைமுறை தலைமுறையாக சொந்தமாக அனுபவித்து வந்த நிலத்தை அரசுக்கு அளித்தவர்களுக்கு உத்தரவாதப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.