/

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத வெல்டிங் பிரிவு

அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வெல்டிங் பிரிவுக்கென ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டும் வகுப்பறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2016, 1:14 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வெல்டிங் பிரிவுக்கென ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டும் வகுப்பறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அரக்கோணத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 1987-இல் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்பயிற்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இங்கு பொருத்துநர், மின்பணியாளர், கடைசல் பிடிப்பவர், மோட்டார் வாகன பழுதுபார்ப்பவர், செல்லிடப்பேசி பழுதுபார்ப்பவர், டீசல் என்ஜின் பழுதுபார்ப்பவர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வருடம் 8-ஆவது படித்த 45 வயதுக்கு உள்பட்டோருக்கான பகுதிநேர பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி நிலையம் தொடங்கி 29 ஆண்டுகள் ஆகியும் இந்த வளாகத்துக்கு சுற்றுச்சுவர் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் முன்புறம் மாநில அரசு நெடுஞ்சாலையும், பின்பக்கம் சென்னை-அரக்கோணம் இருப்புப் பாதையும் உள்ளது. இதனால் இந்த மையக் கட்டடங்களில் மின் சாதனங்கள், அவ்வப்போது திருடு போவதும் சமூக விரோதிகளால் நாசமாக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.
 நுழைவுவாயில் பணிகள் இதுவரை முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நுழைவுவாயில் கதவுகள் திறக்கப்படாததால் மையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளே வரமுடியாமல் சாலையோரமாகவே நிறுத்தப்படும் நிலை உள்ளது.
தற்போது இந்த தொழிற்பயிற்சி மையத்தில் வெல்டிங் பிரிவே இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கான முயற்சியும் மைய நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்பிரிவுக்கென கட்டடமும், கூட்ட அரங்கமும் ரூ. 30 லட்சம் செலவில் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அக்கட்டட தளவாடங்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத நிலையில் அதில் இருக்கும் கூட்ட அரங்கையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ. 30 லட்சம் ரூபாய் அரசு நிதி முழுவதும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், நுழைவுவாயில் பணிகளை விரைந்து முடிக்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.