மூடு விழாவை எதிர்நோக்கியுள்ள அரக்கோணம் ரயில்வே உயர்நிலைப் பள்ளி
அரக்கோணத்தில் 1918-ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட அரக்கோணம் ரயில்வே இருபாலர் உயர்நிலைப் பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.


அரக்கோணத்தில் 1918-ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட அரக்கோணம் ரயில்வே இருபாலர் உயர்நிலைப் பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 3-ஆவது இருப்புப் பாதை சென்னை ராயபுரம்-வாலாஜாபேட்டை இடையே 1856-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது, அரக்கோணம் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் ரயில்வேயில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே பணிபுரிந்து வந்ததால் அவர்களின் பிள்ளைகள் கல்வி பயில அரக்கோணத்தில் 1918-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலேயே 26 ஏக்கரில் அமைந்துள்ள ஒரே உயர்நிலைப் பள்ளி இப்பள்ளி தான்.
ஆங்கிலேய அதிகாரிகளின் பிள்ளைகள் மட்டுமே படித்து வந்த இப்பள்ளியில் சுதந்திரம் பெற்ற பிறகு ரயில்வே பணியில் உள்ள இந்தியர்களின் பிள்ளைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனாலும் ஆங்கிலோ-இந்தியன் கல்வி முறையை பின்பற்றி வந்தனர்.
இக்கல்வி முறை 1970-ஆம் ஆண்டு வரை நீடித்த நிலையில், 1975-க்கு பிறகு அரக்கோணம் நகரில் வசிக்கும் ரயில்வே பணியாளர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்போது, இப்பள்ளியில் சேர்க்கை பெற வேண்டுமானல் ரயில்வே உயரதிகாரி அல்லது எம்.பி. பரிந்துரைகள் தேவைபட்டன.
மேலும், சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் 2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு ரயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தனி கொள்கைகளை ரயில்வே நிர்வாகம் வகுக்கத் தொடங்கியது.
அதன்படி, ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு ரூ. 24 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக நிதிசுமை ஏற்பட்டது.
இதையடுத்து, இந்திய அளவில் ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவின் ஆலோசனைப்படி, பள்ளிகளை மூடிவிடுவது, பள்ளிகளை கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திடம் ஒப்படைப்பது, அரசு, தனியார் பங்களிப்புடன் நடத்துவது என 3 கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு அரக்கோணம் விண்டர்பேட்டையில் இயங்கி வந்த ரயில்வே தொடக்கப் பள்ளி (தமிழ்வழி கல்வி) மூடப்பட்டு, அங்கிருந்த மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
அதன் பின்னர், கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் அரக்கோணம், ஜோலார்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 3 பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இதில், அரக்கோணம் பள்ளியில் முதல் வகுப்பில் ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே சேர்க்கை என உத்தரவிடப்பட்டது. இதனால் அந்த வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதையடுத்து இப்பள்ளி ஆங்கிலோ-இந்தியன் கல்வி முறையில் இருந்து சமச்சீர் கல்வி முறைக்கு மாற்றப்பட்டது.
அரக்கோணம் பள்ளியில் கடந்த 1990-களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிந்து வந்த நிலையில், தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 158 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 1 மற்றும் 3 ஆகிய வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
ரயில்வேயில் அதிகம் வடமாநிலத்தவர்கள் பணியில் உள்ளதால் அவர்களது பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவோர் ஹிந்தி மொழியை எதிர்பார்க்கின்றனர். அம்மொழி இப்பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படாததால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், தற்போதைய ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மேலும் தெற்கு ரயில்வேயில் உள்ள அனைத்து கோட்ட ரயில்வே பள்ளிகளிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளில் அரக்கோணம் பள்ளி மாணவ, மாணவிகளே பெரும்பாலும் ஒட்டு மொத்த கோப்பைகளைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணனிடம் கேட்டபோது, சேர்க்கை குறைவாக உள்ளதால் பள்ளியை மூடும் முயற்சி என்பது தவறு. ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு அவர்கள் முன்வர வேண்டும். இப்பள்ளியில் அனைத்து வசதிகளையும் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
15 கணினிகளுடன் கூடிய கணிணி ஆய்வகம், தனிக் கட்டடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆய்வகங்கள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தலைமை ஆசிரியர் உள்பட 16 ஆசிரியர்கள் உள்ளன என்றார்.
ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் கொள்கையாக இருந்தால், இதே தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் கேரளம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ஊர்களில் இயங்கி வரும் பள்ளிகளில் அதன் பணியாளர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால், அரக்கோணம், ஜோலார்பேட்டை, விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகளுக்கு தான் சேர்க்கை என்ற உத்தரவு ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
நூற்றாண்டைக் காண உள்ள அரக்கோணம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியை மூடாமல் அதிக மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...