ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கடைகளை ஷாப்பிங் மால்களாக மாற்றும் முயற்சியில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரேஷன் கடை என்பது அட்சய பாத்திரம் போன்றது. நியாயமான விலையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டது.
இந்த ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவோரை கணக்கெடுத்து அவர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. அவை கூப்பன் கார்டுகள், ரேஷன் கார்டுகள், குடும்ப அட்டைகள் என பல்வேறு விதமாய் அழைக்கப்பட்டு இன்று மின்னணு குடும்ப அட்டைகளாக மாறி உள்ளன. அந்த ரேஷன் அட்டைகள் பல பெயர்களில் அழைக்கப்பட்டது போல், பல குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறம் என பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள், ரேஷன் கார்டுகள் இந்த நிலையில் இருக்க, அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மற்றொரு புரட்சிக்கு தயாராகிவிட்டன ரேஷன் கடைகள். அங்குள்ள ரேஷன் கடைகள் ஷாப்பிங் மால்களாக மாற்றப்பட்டு வரப்படுகின்றன. "சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால் " என்ற பெயரில் 2018 ஜனவரி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் 29 ஆயிரம் கடைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் "சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள் "பல்வேறு பொருள்கள் கிடைக்கும் வணிக வளாகங்களாய் மாற உள்ளன. சந்திரண்ணா ஷாப்பிங் மால்களை நடத்துவதற்கு ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் குரூப் ஆகிய இரு நிறுவனங்களுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒவ்வொரு ஷாப்பிங் மாலிலும் உணவு மற்றும் உணவு அல்லாத 500-க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வர உள்ளன.
இந்த மால்களில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருள்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருள்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருள்களும் கிடைக்குமெனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி இங்கு பொருள்கள் வாங்கலாம். இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைக் காட்டிலும் 20 சதவீதம் குறைவாக கிடைக்குமெனக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வெளியூர்களுக்குச் செல்லாமல் அனைத்துப் பொருள்களும் தங்களுடைய பகுதியிலேயே குறைந்த, நியாயமான விலையில் வாங்குவதற்கு வசதியாக இத்தகைய ஷாப்பிங் மால்களைத் திறக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நவம்பர் மூன்றாவது வாரத்தில் முதல் கட்டமாக 500 ஷாப்பிங் மால்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மால்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் சுமார் 29 ஆயிரம் மால்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதன் மூலம் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் நியாயமான விலைக்கு வாங்கி பயனடையலாம்.
வரும் காலங்களில் அந்த ஷாப்பிங் மால்கள் மூலம் மருந்துகள், மின்னணு பொருள்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பெரிய நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.