மாவட்டத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: ஆட்சியர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தெரிவித்தார்.


வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்களை ஒழிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் டெங்கு விழிப்புணர்வும், கொசு ஒழிப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் நேரில் ஆய்வு செய்தும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு திடீரென வருகை தந்தார். அங்கு குழந்தைகள் நலப் பிரிவு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்து சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தை சுற்றிப் பார்த்து குறைகளை சரிசெய்ய பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கே.எம்.நகர், புதுமனை பகுதியில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணிகளை பார்வையிட சென்றார். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரிடையாக சென்று கொசு இருக்கிறதா என ஆய்வு செய்தார். மேலும், வீடுகளின் மாடிகளுக்கு சென்று தண்ணீர், குப்பை இருக்கிறதா என பார்வையிட்டார். பின்னர், கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து, ஆம்பூர் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் வழங்கினார்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர், அங்கு சரிவர குப்பை அகற்றாமல் இருந்ததும், கழிவுநீர் தேங்கி இருப்பதையும் பார்த்து, பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பவும், 2 நாள்களில் குறைகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் டெங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுவை ஒழிக்க அதிகாரிகள் நினைத்தால் மட்டும் முடியாது. வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவுதான். டெங்கு கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை சரி செய்யப்படும். அரசு மருத்துவமனையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது, திருப்பத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர் தேவ பார்த்தசாரதி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் காமராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) வளர்மதி, வட்டாட்சியர் மீராபென் காந்தி, நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் சிவகுமார், பிரணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆயிரம் ரூபாய் அபராதம்: கே.எம். நகர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு செய்த போது, அக்பரின் வீட்டிற்கு வெளியே குடிநீர் தொட்டியில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழு இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்தத் தொட்டி திறந்த நிலையில் சுகாதாரமில்லாமல் இருந்ததால், வீட்டின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...