வேலூரில் ரூ. 70 லட்சம் வீண்: பயன்பாடின்றி கிடக்கும் மாநகராட்சி  தரைதளக் கடைகள்...!

வேலூர் மாநகரில் ரூ. 70 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தரைதளக் கடைகளை வியாபாரிகள் யாரும் பயன்படுத்தாததால் அவை பயன்பாடின்றிக் கிடக்கின்றன. 
Updated on
1 min read

வேலூர் மாநகரில் ரூ. 70 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தரைதளக் கடைகளை வியாபாரிகள் யாரும் பயன்படுத்தாததால் அவை பயன்பாடின்றிக் கிடக்கின்றன. 
வேலூர் மாநகராட்சிப் பகுதி லாங்கு பஜாரில் சாலையோரக் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளால் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அப்புறப்படுத்த நீண்ட நாள்களாக வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
 இதனிடையே,  நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, வேலூர்  லாங்கு பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர வியாபாரிகளுக்கு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பில் 252 தரைக் கடைகள் கழிப்பறை வசதியுடன் புதுப்பிக்கப்பட்டன.
இதில் லாங்கு பஜார் நடைபாதை வியாபாரிகள் 154 பேருக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள கடைகள் மற்றபகுதி நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. 
இந்த வளாகத்தில் தரை வாடகையாக நாளொன்றுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டது. இக்கடைகள் ரூ. 80.30 லட்சத்துக்கு ஏலம் போனது. 
தொடர்ந்து, லாங்கு பஜாரில் தரை கடை வைத்திருந்த வியாபாரிகள் அனைவரும் கடையை காலி செய்து பழைய மீன் மார்க்கெட்டில் கட்டப்பட்ட புதிய கடைக்கு மாறினர். 
ஆனால், சாலையோரத்தில் இருந்ததைவிட தரைதள கடைகளுக்கு பொதுமக்கள் வரத்து குறைந்து வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், அவர்கள் மீண்டும் சாலையோரத்திலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினர். 
படிப்படியாக அனைத்து வியாபாரிகளும் தரைதளக் கடைகளைப் புறக்கணித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. 
அதேசமயம், லாங்கு பஜார் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.  இதையடுத்து சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தி, தரைதளக் கடைகளைப் பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிகர் சங்க மாவட்டச் செயலர் ஞானவேல் கூறியதாவது:  லாங்கு பஜார் தரைதள கடைகளுக்கு மக்கள் வருகை குறைந்ததால் வியாபாரிகளுக்கு வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனாலேயே அவர்கள் தொடர்ந்து சாலையோரத்தில் கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். 
அந்த தரைதள கடை வளாக சுற்றுச்சுவர்களையும், பின்னால் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தையும் அப்புறப்படுத்தினால் மக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறும். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து கேட்டதற்கு, மாநகராட்சி ஆணையர் சி.விஜயகுமார் கூறியதாவது:
லாங்குபஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைதள கடைகளை பயன்படுத்துவது குறித்து சாலையோரக் கடை வியாபாரிகளை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதனடிப்படையில், அக்கடைகளை பயன்பாட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com