ஆம்பூர் நகரில் 60 ஆண்டுகளுக்கு மேல் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட கிளை நூவகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்பட வேண்டும் என நீண்ட காலமாக வாசகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் காலணி தொழிற்சாலைகள் மூலம் அந்நிய செலாவணியை அதிகமாய் ஈட்டி தரும் நகரம் ஆம்பூர். ஆம்பூர் நகரம் மற்றும் நகரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் அரசின் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஆனால், ஆம்பூர் நகரில் மாவட்டக் கிளை நூலகம் 60 அண்டுகளுக்கு மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
நேதாஜி சாலையில் அரசு சார்-நிலை கருவூல அலுவலகம் எதிரே உள்ள தனியார் கட்டடத்தின் முதல் மாடியில் சுமார் 1,500 சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இங்கு போதுமான அளவு மின்விசிறிகள், மின் விளக்குகள், கழிப்பறை வசதிகள் உள்ளன. இருப்பினும் மாடியில் உள்ள நூலகத்துக்கு வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
1954-ஆம் ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்ட கிளை நூலகம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணாபுரம் பகுதியில் (தனியார் இடத்தில்) இயங்கி வந்தது. இந்த இடம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரை புறவழிச் சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. பின்னர் 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது உள்ள கட்டடத்தில் (நேதாஜி சாலையில்) இயங்கி வருகிறது. இந்த நூலகம் அடிக்கடி இடம் மாறுவதால், வாசகர்களின் எண்ணிக்கையும், புத்தகங்கள் எடுத்து செல்லும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து போனது. அன்றாடம் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்த நிலையில் தற்போது 200-க்கும் குறைவானவர்களே வந்து செல்கின்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்த இந்த நூலகத்தில், தற்போது சுமார் 6,500 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நூலகத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவற்றில் கதை, கவிதை, அறிவியல், விஞ்ஞானம், போட்டிக்குத் தேவையான பொது அறிவு புத்தகங்கள், சட்டம், வரலாறு, சிறுகதை, மருத்துவம், பாடல் தொகுப்பு, உளவியல், ஆன்மிகம், சமய நூல்கள் உள்ளன.
இந்த நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளின் இதழ்களும் உள்ளன. அவற்றில் 16 தமிழ் நாளிதழ்கள், 5 ஆங்கில நாளிதழ்கள், 3 உருது நாளிதழ்கள், 12 வார இதழ்கள், 2 வேலைவாய்ப்பு வார இதழ்கள், 92 மாத இதழ்களும் அடங்கும். இந்த நூலகத்துக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவோரை புரவலராகவும், ரூ. 5 ஆயிரம் வழங்குவோரை பெரும் புரவலராகவும், ரூ. 10 ஆயிரம் வழங்குவோரை கொடையாளராகவும் கொண்டு சுமார் 65-க்கும் மேற்பட்டோர் நூலகத்துக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.
காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது. இங்கு நூலகர் ஒருவர், அலுவலக உதவியாளர் ஒருவர், இளநிலை உதவியாளர் ஒருவர், தற்காலிக துப்புரவுப் பணியாளர் ஒருவர் பணியில் உள்ளனர். இணையதள வசதியுடன் 3 கணினிகள், ஸ்கேனர், கணினி அச்சு இயந்திரம், பிரதி நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியன உள்ளன. இந்தச் சேவைகள் பொதுமக்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் உள்ளன.
இருப்பினும், இந்த நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்க தளவாடங்கள் இல்லை. மேஜை, நாற்காலிகள் போதுமான அளவு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நூலகத்துக்கு வாடகை, மின் கட்டணம் போன்றவற்றுக்காக சுமார் ரூ. 25 ஆயிரத்தை மாதந்தோறும் அரசு செலவிடுகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், ஆம்பூரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்குவதும், கட்டடம் கட்ட இடம் இல்லாத காரணத்தால் அந்த நிதி மீண்டும் அரசு கருவூலத்துக்கே திரும்பிச் செல்வதும் தொடர் கதையாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தின் நகரம் சிறந்த தொழில் நகரம் ஆம்பூர். சட்டப்பேரவை தொகுதி அந்தஸ்து மட்டும் அல்லாதபோது, ஆம்பூர் வட்டமாகவும் உள்ளது. பெரும்பாலான மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 1.50 லட்சம். நகரையொட்டி பேர்ணாம்பட்டு மற்றும் மாதனூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. படிக்கும் மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வோருக்கும், தகவல் குறிப்புகள் தேடுவோருக்கும் நூலகம் சொந்தமாக நிரந்தர கட்டடம் இல்லாமல் இயங்கி வருவது இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
எனவே, மாநில அரசு உடனடியாக ஆம்பூரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்து, அங்கு கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே ஆம்பூர் நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.