
இடைத் தேர்தலில் கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது தான் ஒரே இலக்கு என தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொகுதி இடைத் தேர்தல் குறித்த செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சாதாரண தொண்டரான எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்துகிறார். 18 தொகுதிகளுக்கும், ஏற்கெனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளைச் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி குடியாத்தம் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்வர் பழனிசாமி அமைதியான முறையில் கடந்த 2 ஆண்டுகளாக மக்களாட்சி நடத்தி வருகிறார். அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு குறித்தும், கஜா புயலில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்தும் எதிர்க் கட்சிகள் மக்களிடம் தவறான தகவல்களையும், பொய்ப் பிரசாரங்களையும் பரப்பி வருகின்றனர். எனவே எதிர்க் கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் நமது தேர்தல் பிரசாரம் அமைய வேண்டும். இடைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. அதிமுக தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. நாம் கடுமையாக உழைத்தால் 20 தொகுதிகளிலும் எளிதாக வெற்றிபெறலாம். நமது ஒரே இலக்கு கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது தான் என்றார்.
கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வி. ராமு வரவேற்றார். மாநில அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், கட்சியின் அமைப்புச் செயலர் ஆதிராஜாராம், விவசாயப் பிரிவுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜி. லோகநாதன், தூசிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





